ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காவல் துறை சப் டிவிஷனில் எவ்வித தங்கு தடையுமின்றி மது விற்பனை அமோகமாக நடைபெற்றுவருவதாக பல்வேறு தரப்பிலிருந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார்கள் சென்றன.
இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் உத்தரவின் பேரில் தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா தலைமையிலான குழுவினர் கோவில்பட்டி சப் டிவிஷனில் பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் கோவில்பட்டி அருகே நாலாட்டின் புதூரில் விவசாய நிலங்களிலும் சாலையோரங்களிலும் பதுங்கு குழிகள் அமைத்து மது விற்பனை ஜோராக நடைபெற்று வருவதாக காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில், உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா தலைமையிலான காவல் துறையினர், அப்பகுதிக்கு விரைந்து சென்று அங்கு முகாமிட்டு கண்காணித்தனர்.
அப்போது பதுங்கு குழிகளுக்குள் பதுக்கி வைத்து மது விற்பனையில் ஈடுபட்ட நபரை கையும் களவுமாக பிடித்து அவரிடம் இருந்து 500க்கும் மேற்பட்ட மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கயத்தாறு பகுதியில் 4,500 மதுபான பாட்டில்களை இசக்கிராஜா தலைமையிலான காவல் துறை குழு கைப்பற்றி கயத்தாறு காவல் நிலையத்தில் ஒப்படைத்திருந்தது.
ஆனால், காவல் துறை உயர் அலுவலர்கள் மற்றும் ஆட்சியாளர்களின் எதிரொலி காரணமாக அந்த மதுவை அப்பகுதி காவல் துறையினர் விற்பனை செய்தவர்களிடமே மீண்டும் ஒப்படைத்ததாகக் கூறப்படுகிறது.
தற்போது நாலாட்டின் புதூரில் குழிகளுக்குள் பதுக்கி வைத்து மது விற்பனை நடைபெறுவதை தனிப்படை காவல்துறை குழு செய்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மேலும் 69 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி!