ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 29). மோட்டார் சைக்கிள் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார்.
இவர் கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமி ஒருவரை பல்வேறு இடங்களுக்கும் அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பம் அடைந்த நிலையில் சிறுமியை திருமணம் செய்ய மாரிமுத்து மறுத்துள்ளார்.
இதற்கிடையே மாரிமுத்துவுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, திருமணம் செய்வதாகக் கூறி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி கடந்த 2015ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி ஸ்ரீவைகுண்டம் காவல் துறையில் புகார் அளித்தார். அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் மாரிமுத்து மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மரபணு பரிசோதனையின் மூலம் அவர் மீதான குற்றச்சாட்டை உறுதிபடுத்தினர்.
இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மாரிமுத்துவுக்கு ஆயுள் தண்டனையும், ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி குமார சரவணன் தீர்ப்பளித்தார்.