தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், கருங்குளத்தில் இருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் வழியில் கடந்த மூன்று மாதங்களாக அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. இங்குள்ள வாழை மரத்தில் தீடீரென்று தீப்பற்றி எரிவதும், அதை தீயணைப்பு படையினர் அணைப்பதும் வாடிக்கையாகவே இருந்து வருகிறது.
இந்த நிலையில், வரும் 5-ஆம் தேதி ஆதிச்சநல்லூரில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகை தரவுள்ளார். இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேடை அமைக்கும் பணிக்காக மிகப்பெரிய ஷெட் அமைத்தும் வருகிறார்கள். இதற்கிடையில் நேற்று இரவு ஷெட் அமைக்கும் பகுதி அருகே திடீரென தீ பற்றி எரிய தொடங்கியது.
இந்த தீ காற்றில் மிக வேகமாக பரவ ஆரம்பித்து அருகில் இருந்த பனைமரங்களுக்கு பரவி பனைமரங்கள் எரிய ஆரம்பித்தது. இதனால் சுமார் 30-க்கும் மேற்பட்ட பனை மற்றும் தென்னை மரங்கள் பற்றி எரிந்தன. மேலும், வாழை தோட்டத்திலும் தீ பரவ ஆரம்பித்தது. இச்சம்பவம் குறித்து பொதுமக்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இத்தகவலறிந்த தீயணைப்பு படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்க போராடினார்கள். நீண்ட நேரம் போராடியும், தீயை அணைக்க முயலவில்லை. இதனால், கூடுதலாக திருச்செந்தூரில் இருந்தும், பாளையங்கோட்டையில் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. மேலும், காற்றின் திசை மாறுபாடு காரணமாக தீயானது அருகில் இருந்த தனியார் உணவகம் மற்றும் பைக், புல்டோசர் போன்ற வாகனங்களின் மீது பரவ ஆரம்பித்தது.
இச்சம்பவத்தால் அவ்வழியே போக்குவரத்தானது மாற்றப்பட்டு கருங்குளத்தில் இருந்து, கொங்கராயகுறிச்சி வழியாக ஸ்ரீவைகுண்டம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து சுமார் 3 மணி நேரமாக தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு துறையினர் தொடர்ந்து போராடினர்.
மேலும், சம்பவ இடத்தில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், ஸ்ரீவைகுண்டம் துணைக் காவல் கண்காணிப்பாளர் மாயவன் மற்றும் ஸ்ரீவைகுண்டம் காவல் ஆய்வாளர் அன்னராஜ் ஆகியோர் பார்வையிட்டனர். மேலும், நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகும், தீயை அணைக்க முற்பட்டு அணைக்க முடியாத காரணத்தினால் போலீசார், திருச்செந்தூர் சாலை அமைக்கும் ஒப்பந்தகாரர்களின் லாரிகளில் தண்ணீரை கொண்டு வந்து பீய்ச்சி அடிக்க தொடங்கினர். தீயணைப்பு படையினரும், ஒப்பந்ததாரர்களும் சேர்ந்து நீண்ட நேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர்.
இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீ எங்கிருந்து பரவியது? மத்திய நிதியமைச்சர் நீர்மலா சீதாராமன் நிகழ்ச்சியை தடுக்க திட்டமிட்ட சதியா? என பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:Theni: விபத்தில் தீயில் கருகி உயிரிழந்த தலைமைக் காவலர்! 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம்