தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட நக்கலைகோட்டையைச் சேர்ந்தவர் முத்தால்ராஜ். இவர் அந்த கிராமத்தில் உள்ள தனசேகரன் என்பவருக்கு சொந்தமான ஏழு ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளார்.
அந்த ஏழு ஏக்கர் நிலத்தை ஊர் பயன்பாட்டுக்காக பொது மக்கள் ஒன்று சேர்ந்து வாங்க இருந்ததாகவும், அதையும் மீறி முத்தால்ராஜ் வாங்கியதால், ஊர்க் கட்டுப்பாட்டை மீறியதாக கூறி முத்தால் ராஜ் மற்றும் அவரது உறவினர்கள் என ஆறு குடும்பத்தைச் சேர்ந்தவர்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது குறித்து முத்தால் ராஜ், அவரது உறவினர்கள் மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், வட்டாட்சியர் என பல தரப்பினர் இடையே புகார் மனு அளித்தனர். இதையடுத்து அலுவர்கள் இருதரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை.
தங்களது ஆறு குடும்பங்களையும் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததால், கடைகளில் பொருட்கள் வாங்க முடியவில்லை, உள்ளூர் விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை, ஆறு பேர் பிள்ளைகள் பள்ளிகளுக்கு ஆட்டோவில் செல்ல அனுமதி அளிக்கவில்லை எனக்கூறி ஊரை விட்டு ஒதுக்கி வைத்த ஒன்பது பேர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, முத்தால்ராஜ் சகோதரி சண்முகவேல் தாய் கோவில்பட்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதையடுத்து அந்த ஒன்பது பேர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க எட்டயபுரம் காவல் நிலையத்திற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து எட்டயபுரம் காவல் துறையினர் கடந்த 16ஆம் தேதி வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் யார் மீதும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை.
இது குறித்து சண்முகவேல் தாய் பலமுறை காவல் நிலையத்திற்குச் சென்றும் எவ்வித முறையான பதிலும் காவல் துறையினர் தரப்பிலிருந்து கிடைக்காததால் மனமுடைந்த அவர் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு விஷமருந்தினார்.
இதையடுத்து காவல் துறையினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: யுபிஎஸ்சியில் தோல்வி - மெட்ரோ ரயில் முன் குதித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்