தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோயிலில் பிரசித்த பெற்ற தசரா திருவிழா இன்று(அக்.17) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி அதிகாலை ஐந்து மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காலை 10.45 மணிக்கு கொடிப்பட்டம் புறப்பட்டு கோயிலைச் சுற்றி வலம் வந்தது. கோயில் முன்புள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது.
கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, இன்று(அக்.17) பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதுபோல் 10, 11ஆம் திருவிழா நாள்களில் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் திருவிழாவான இன்று(அக்.17) முதல் 9ஆம் நாள் வரையிலும், விழா நிறைவு நாளிலும் தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் அரசின் வழிகாட்டுதல்படி 8 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
விழா நாள்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு கோலத்தில் எழுந்தருளி, கோயிலைச் சுற்றி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறும். இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம், 10-ம் நாளான வருகிற அக்.26ஆம் தேதியன்று கோயில் வளாகத்தில் நடக்கவுள்ளது.
கோயிலில் பக்தர்கள் வரிசையாக செல்லவும், தகுந்த இடைவெளியை கடைபிடிக்கவும் கோயில் முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. கோயில் வளாகத்தில் தூய்மை பணியாளர்கள் கிருமிநாசினி தெளித்து வருகின்றனர். பக்தர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதிக்கவும், கைகழுவும் திரவம் மூலம் கைகளை சுத்தமாக கழுவிய பின்னரே அனுமதிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
விழா ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் (பொறுப்பு) ரத்தினவேல் பாண்டியன், கோயில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பகவதி அம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழாவையொட்டி பிரமாண்ட கொலு