தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயிலில் தசரா திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி தினத்தை முன்னிட்டு, கொண்டாடப்படும் இந்த தசரா திருவிழா இன்று (அக்.15) காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் துவங்கியது.
கொடியேற்றத்தை முன்னிட்டு, அதிகாலை 5 மணி அளவில் கோயில் நடை திறக்கப்பட்டு, காலை 6 மணிக்கு யானை மீது கொடி பட்டம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. அதனைத் தொடர்ந்து அம்பாளுக்கும், கொடி மரத்திற்கும் சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது.
மேலும், காலை 9.25 மணிக்கு உள் பிரகாரத்தில் உள்ள செப்பு கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொடி மரத்துக்கு பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடைபெற்று மகா தீபாராதனை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, பக்தர்கள் திருக்காப்பு கட்டி வேடம் அணியத் தொடங்கினர்.
இந்த கொடியேற்றத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்தனர். “ஓம் காளி ஜெய் காளி” என்ற கோஷத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்பு பணியில் சுமார் 700 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
கொடியேற்றத்தை முன்னிட்டு, சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. திருவிழா நாட்களில் ஒவ்வொரு நாளும் அம்மன் பல்வேறு கோலத்தில் எழுத்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் வருகிற 24ஆம் தேதி கோயில் கடற்கரையில் நடைபெறுகிறது.
இதையும் படிங்க:ஈரோடு பண்ணாரி அம்மன் கோயிலில் களைகட்டிய வள்ளி கும்மி நடனம்!