குமரி மாவட்டம் நாகர்கோவிலில் மகாத்மா காந்தி பிறந்த நாள் விழா ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி இன்று விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாட முடிவு செய்துள்ளோம். அந்த வகையில், கன்னியாகுமரியில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் பேரணி செல்ல முடிவு செய்துள்ளோம். அதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. காந்திக்கும் - காங்கிரசுக்கும் தொப்புள்கொடி உறவு உண்டு. ஆனால் பாஜகவுக்கு துப்பாக்கியுடன்தான் உறவு உண்டு.
சுதந்திரத்திற்காக பாஜகவினர் ஒரு நிமிடம் கூட சிறையில் இருந்தது கிடையாது. நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் வெற்றிக்கு நாங்கள் கடுமையாகப் பணியாற்றுவோம். தேர்தல் பரப்புரைக்காக நிச்சயமாக வைகோவை அழைப்போம். தமிழ்நாடு எம்.பி.க்கள் ஐந்து ஆண்டுகளில் செய்ய வேண்டியதை ஒரே மாதத்தில் செய்துள்ளனர். அஞ்சல் துறை, ரயில்வே துறை ஆகியவற்றில் தமிழில் தேர்வு எழுதுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். இதைவிட ஆக்கப்பூர்வ நடவடிக்கை வேறு எதுவும் வேண்டாம்.
இடைத்தேர்தலில், பணம் மக்களை சென்று சேராது. சேவைதான் மக்களைச் சென்றுசேரும். ஆகவே சேவையை முன்வைத்து இடைத்தேர்தலில் நாங்கள் வெற்றிபெறுவோம். தமிழ்நாடு அரசு செயலிழந்துவிட்டது. மத்திய அரசிடமிருந்து தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய நிதி ஆதாரங்களைப் பெற முடியவில்லை.
மத்திய அரசை எதிர்த்துக் கூட பேச முடியாமல் இருக்கிறார்கள். மக்களை திசை திருப்ப மத்திய பாஜக ஆட்சி என்ன செய்து கொண்டு இருக்கிறதோ, அதை அப்படியே இங்குள்ள அதிமுக அரசும் செய்கிறது. நாங்குநேரி இடைத்தேர்தலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பரப்புரைக்கு அழைப்போம்” என்றார்.
இதையும் படிங்க: 'நாங்குநேரி தொகுதியில் குமரி அனந்தன் போட்டி?' - வெற்றியைத்தக்க வைக்க காங்கிரஸ் பலே வியூகம்!