நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த அஷ்ரப் அலி என்பவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்றுவிட்டதால் இரண்டு பெண் குழந்தையை வளர்க்க அஷ்ரப் அலி சிரமப்பட்டுள்ளார். இதனிடையே, 4 வயது சிறுமியை குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் சேர்க்க உதவி செய்யுமாறு தனது நண்பரிடம் கேட்டுக்கொண்டார்.
இதை பயன்படுத்திக் கொண்ட அந்த நண்பர், சிறுமியை காப்பகத்தில் சேர்த்ததாக கூறிவிட்டு 1.50 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் காப்பகத்தில் சேர்க்கப்பட்ட தனது குழந்தையை பார்க்க வேண்டுமென்று அஷ்ரப் அலி அவருடைய நண்பரிடம் கூறியுள்ளார். ஆனால் அந்த நண்பரோ பலமுறை தட்டிக்கழித்த நிலையில் சில நாட்களுக்கு பின் மதுரையில் குழந்தை இருப்பதாக கூறி முகவரி ஒன்றை கொடுத்துள்ளார்.
அதைப்பெற்றுக்கொண்டு நாகப்பட்டினத்தில் இருந்து மதுரைக்கு நடந்தே சென்ற அஷ்ரப் அலி, நண்பர் கொடுத்த முகவரியில் தன் குழந்தையை தேடினார். ஆனால் அங்கு சிறுமி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே போன் மூலம் இது குறித்து தனது நண்பரிடம் கேட்டபோது சிறுமியை விற்றுவிட்டதாகவும் இதை வெளியே கூறினால் காவல் துறையினரிடம் புகார் அளித்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
இதையடுத்து, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று மாவட்ட ஆட்சியரிடம் நடந்ததைக் கூறியுள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்தி சிறுமியை மீட்குமாறு காவல்துறை உயர் அலுவலர்களுக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவலர்கள், அஷ்ரப் அலியின் நண்பரிடம் விசாரணை நடத்தினர்.
இதில் அந்த சிறுமியை கோவில்பட்டியில் உள்ள ஒரு தம்பதிக்கு விற்றது தெரியவந்தது. இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ஜோதிகுமார் உதவியுடன் அடுத்த ஒரு மணி நேரத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி லாயல் மில் பகுதியில் உள்ள தம்பதியிடம் இருந்த சிறுமியை மீட்டு காணொலி காட்சி மூலம் தந்தையுடன் பேச வைத்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, தூத்துக்குடி குழந்தைகள் காப்பகத்திற்கு சிறுமி அழைத்து வரப்பட்டு விசாரணைக்கு பின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையும் படிங்க: சிறுமி பாலியல் வன்புணர்வு: மீன் வியாபாரி மீது பாய்ந்தது போக்சோ!