கோவில்பட்டி அருகே உள்ள இலுப்பையூரணி ஊராட்சிக்குட்பட்ட பகுதி திருமலை நகர். இப்பகுதியில் சுமார் 120க்கும் மேற்பட்டக் குடியிருப்புகள் உள்ளன. கடந்த சில தினங்களாக கோவில்பட்டி சுற்றுவட்டாரத்தில் பலத்த மழை பெய்துவருகிறது. தொடர் மழையின் காரணமாகத் திருமலை நகரில் குடியிருப்புகளை சுற்றி மழைநீர் தேங்கியுள்ளது. அதிகளவில் மழைபெய்து வருவதால், பெரும்பாலான பகுதிகளில் வெள்ளமும் ஏற்பட்டுள்ளது. மேலும் அருகிலுள்ள குறிஞ்சாங்குளம் கண்மாய் பகுதியிலிருந்தும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியதால் திருமலை நகரப்பகுதி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
இந்த மழைநீருடன் சேர்த்து கழிவுநீரும் வெளியேறுவதால், தேங்கி நிற்கும் நீர் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொடர்மழை பெய்தபோது, இதுபோன்று மழைநீர் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்பட்டதாக தாங்கள் புகார் அளித்ததாகவும், அதேபோல் தற்போது மீண்டும் மழைநீர் தேங்கி இரண்டு நாட்களாக வீட்டை விட்டு வெளியேற முடியாத சூழலில் இருப்பதாகவும் மக்கள் தெரிவித்தனர்.
மழைநீர் தேங்கி நின்று கடுமையாக துர்நாற்றம் வீசுவதால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உருவாகி இருப்பதால், அரசு அலுவலர்கள் உடனடியாக தேங்கியுள்ள நீரை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் கூறினர். மேலும் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 'சாலையில் நின்று பேசியது குற்றமா?' - தூத்துக்குடியில் மூவருக்கு நடந்த அரிவாள்வெட்டு!