தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஸ்ரீராம் நகரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்துகொண்டார். அவர் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமினை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வின்போது விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் சின்னப்பன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அனிதா உள்பட பலர் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, " தேர்தல் நேரத்தில் தங்களது இருப்பை காட்ட வேண்டும் என ஸ்டாலின் மக்களிடம் மனுக்களை வாங்கி வருகிறார். ஸ்டாலின் அதிகாரத்திலிருந்து செய்யவேண்டிய பணிகளை எதிர்க்கட்சித் தலைவராக இருந்து மக்களை ஏமாற்றுகிறார்
இவர் மனுக்களை வாங்கி எப்படி தீர்வு காண முடியும். இதெல்லாம் ஏமாற்று வேலை. தேர்தல் வந்தாலே ஏமாற்று வேலைகளில் கைதேர்ந்தவர்கள் திமுகவினர். 2019இல் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவினர் கோடிக்கணக்கான மனுக்களை வாங்கினார்கள். ஏதாவது ஒரு மனுக்கு தீர்வு கண்டது உண்டா.
கோவில்பட்டியில் தீப்பெட்டி தொழிற்சாலை நிர்வாகிகளிடம், நான் வெற்றி பெற்றால் ஜிஎஸ்டி வரி விதிப்பு பிரச்னையை தீர்த்து வைப்பேன் என கனிமொழி எம்பி தெரிவித்தார். அவர்களும் ஓராண்டு பொறுத்திருந்தார்கள். ஆனால் ஒரு துரும்பைக்கூட கிள்ளிப் போடவில்லை. ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக அவர்கள் செய்ய வேண்டிய பணியைக்கூட மாநில அரசின் சார்பில் மத்திய அரசை வலியுறுத்தி நாங்கள் செய்துவருகிறோம்" என்றார்.