தூத்துக்குடி: கோவில்பட்டி கடலை மிட்டாய் இந்திய அளவில் புகழ்பெற்றதாக விளங்குகிறது. மேலும், புவிசார் குறியீடு பெற்றுள்ளதால் கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு பெருமை சேர்த்துள்ளது. தற்போது கோவில்பட்டி கடலை மிட்டாயை அஞ்சலகங்களில் ரூ.390 ரூபாய் செலுத்தி ஆர்டர் செய்து ஓரிரு நாட்களில் பெற்றுக் கொள்ளலாம் என இந்திய அஞ்சல் துறை அறிவித்துள்ளது.
இது குறித்து கோவில்பட்டி முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் விடுத்துள்ள அறிக்கையில், ‘புவிசார் குறியீடு பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாயின் பெருமையை உலக அளவில் கொண்டு செல்ல இந்திய அஞ்சல் துறை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட்டது. தற்போது கோவில்பட்டி கடலைமிட்டாய் விற்பனையும் அஞ்சல்துறை மூலம் அனைத்து அஞ்சலகங்களில் தொடங்கப்பட்டுள்ளது.
கோவில்பட்டி கடலைமிட்டாய் இனி, அஞ்சலகங்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வீட்டு வாசலில் தபால்காரர்கள் மூலம் சேர்க்கப்பட உள்ளது. இந்தியாவில் எந்த அஞ்சலகத்திலும் ரூபாய் 390 கொடுத்து கடலை மிட்டாயை ஆர்டர் செய்தால், கோவில்பட்டி தலைமை அஞ்சல் இணையம் மூலம் பெறப்பட்டு, அடுத்த ஓரிரு நாட்களில் அவர்கள் வீட்டிற்கு விரைவு அஞ்சல் மூலம் கொண்டு சேர்க்கப்படும்.
விரைவு அஞ்சல் தனிக் கட்டணம் கிடையாது. ஒரு கிலோ எடையுள்ள கோவில்பட்டி கடலை மிட்டாய் பார்சலில் 5 பாக்கெட்டுகள் கிடைக்கும். வீட்டில் இருந்தபடியே தபால்காரர்கள் மூலம் ரூ. 390 செலுத்தி ஆர்டர் செய்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அஞ்சல் துறை.
இது கோவில்பட்டி கடலைமிட்டாய் உற்பத்தியாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்திய அஞ்சல் துறை மூலம் கோவில்பட்டி கடலை மிட்டாய், இந்தியா முழுவதும் எடுத்துச்செல்ல ஏதுவாக இருக்கும் எனவும் உற்பத்தியாளர்கள் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: திகைக்க வைக்கும் எம்.பி.க்களின் சொத்துவிவரங்கள் - ப. சிதம்பரத்தின் சொத்துமதிப்பினை அறிவீர்களா?