தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜீவ் நகரை சேர்ந்தவர் மாரியப்பன் (75). நகைக்கடை உரிமையாளரான இவர், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்துவருகிறார். இவர் மீது கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கு விசாரணை தொடர்பாக கடந்த இரண்டு மாதங்களாக வெளியூர்களில் தங்கியிருந்தார்.
இந்நிலையில், இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பிணை வழங்கியது. இதனையடுத்து, மாரியப்பன் நேற்று(ஜன.8) மீண்டும் கோவில்பட்டியில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார்.
அப்போது வீட்டின் முன் பக்கத்தில் இரும்பு கேட்டில் போடப்பட்டிருந்த பூட்டுக்கள் மாற்றப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன் பின்னர் அக்கம் பக்கத்தினர் துணையுடன் பூட்டை உடைத்துவிட்டு வீட்டிற்குள் சென்றபோது, அங்கு வைக்கப்பட்டிருந்த அமெரிக்க துப்பாக்கி, 26 குண்டுகள், 2 கிலோ வெள்ளி பொருள்கள், துப்பாக்கி உரிமம், சொத்து ஆவணங்கள் ஆகியவை திருடு போயிருந்தது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாரியப்பன், கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்ட காவல்துறையினர், தடயங்களை கைப்பற்றி விசாரணை நடத்திவருகின்றனர்.
நகைக்கடை அதிபர் மாரியப்பனுடன் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் தொடர்புடைய கந்துவட்டி கும்பல் திட்டமிட்டு இந்த திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டு, துப்பாக்கியையும் தோட்டாக்களையும் திருடிச் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.