தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை என மூன்று இடங்களில் அகழாய்வுப் பணிகள் நடந்துவருகின்றன.
இந்த அகழாய்வுப் பணியானது கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி தொடங்கியது. கொற்கையில் கடந்த 1968, 69இல் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் அகழாய்வுப் பணிகள் நடந்தன.
அந்த அகழாய்வுப் பணிதான் தமிழ்நாடு தொல்லியல் துறை உருவான பின்னர் செய்த முதல் அகழாய்வுப் பணி. கடந்த முறை அகழாய்வின்போது 2800 ஆண்டுகள் பழமையானது கொற்கை என உறுதியானது.
இங்கு துறைமுகம் இருந்ததாகவும், இங்கிருந்து கடல்வழி ஏற்றுமதி இறக்குமதி நடந்ததாகவும், பாண்டிய மன்னரின் தலைநராக இவ்விடம் விளங்கியது எனவும் அறிப்பட்டது.மேலும் அதே குழியில் சங்குகள் அறுத்த பின்னர் தீட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட கற்கள் பல வடிவங்களில் கிடைத்துள்ளன. மேலும் இந்த அகழாய்வுக் குழிகளில் சங்குகள், சங்கு வளையல் துண்டுகள், இரும்பு உருக்குத் துண்டுகள், கறுப்பு, சிவப்பு பானை ஓடுகள், கீறல்கள் மற்றும் குறீயிடுகள் என ஏராளமான பழங்கால பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த அகழாய்வுப் பணியானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
கொற்கை துறைமுகம் மிகப்பெரிய வியாபாரத் தலமாக இருந்துள்ளது. முன்பு நடந்த ஆய்வில் கிடைத்த பொருள்களை தென்காசி மாவட்டம் குற்றாலம் வைப்பறையில் காட்சிக்கு வைத்தனர்.
தற்போது இங்கு கிடைக்கும் பொருள்களைச் சேகரித்து, பழைய பொருள்களையும் கொண்டுவந்து இந்தப் பகுதியிலேயே அருங்காட்சியகம் அமைத்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்று தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
வெளிநாட்டு தமிழ் அறிஞர் கால்டுவெல் இந்தப் பகுதியில் அகழாய்வு செய்தபோது தெரு முழுவதும் சங்குகளும், வெளிநாட்டு நாணயங்களும் நடந்துசெல்லும் இடங்களில் எல்லாம் கிடைத்தன என எழுதியுள்ளார்.
தற்போதும் அகழாய்வின்போது நிறைய சங்குகள் ஆங்காங்கே கிடைக்கின்றன. கொற்கையின் முழுமையான அகழாய்வு முடிவு வெளியாகும்போது, உலகமே தமிழனின் பெருமையைச் சிறப்பாகப் பேசும் காலம் வரும். எனவே, கொற்கை அகழாய்வை தொல்லியல் ஆர்வலர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
இது குறித்து எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கூறும்போது, "கொற்கையில் மிகவும் பழமையான விநாயகர் கோயில் உள்ளது. இதில் ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன. இந்தக் கல்வெட்டுகள் மஞ்சள் அடித்து மறைக்கப்பட்டுள்ளன. இந்தக் கோயிலை பழமை மாறாமல் கல்வெட்டுகளை வெளியே தெரியும்படி சீரமைக்க வேண்டும்.
இதுபோல் கொற்கை துறைமுகம் இருந்த இடத்தில் மாதிரி துறைமுகம் அமைத்து மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபோது இதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.
அதன்பின் அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுவிட்டது. மீண்டும் கொற்கை பகுதியைச் சிறப்பாகக் காட்சிப்படுத்த வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: மூன்றாம் கட்ட தடுப்பூசித் திட்டம்: இதுவரை 2.45 கோடி பேர் முன்பதிவு!