தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் அருகேயுள்ள வடக்கு இலந்தைகுளம் ஊராட்சிக்குட்பட்ட மூன்றாவது வார்டுக்கு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் உமா, வள்ளித்தாய் என்ற இருவர் போட்டியிட்டனர். இதில், போட்டியிட்ட உமா என்ற வேட்பாளர் பெயர் துணை வாக்காளர் பட்டியலில் இல்லாத காரணத்தால் கடந்த இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது.
நேற்று கயத்தார் யூனியன் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு மற்றொரு வேட்பாளரான வள்ளித்தாய் எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, உமாவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இதனால் வாக்கு எண்ணிக்கை காலையில் தொடங்கவில்லை.
வள்ளித்தாயிடம் அலுவலர்கள் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் சமாதானம் அடையாமல் வாக்கு எண்ணிக்கை நடத்தக்கூடாது என தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனு அளித்தார். ஆனால், மாலையில் வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் என்று அறிவித்தது மட்டுமின்றி வள்ளித்தாய் வீட்டிலும் அலுவலர்கள் நோட்டீஸ் ஒட்டினர்.
இதையடுத்து, மாலை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் உமா மட்டும் பங்கேற்றார். வள்ளித்தாய் பங்கேற்கவில்லை. மொத்தம் பதிவான 157 வாக்குகளில் உமா 118 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட வள்ளித்தாய் 28 வாக்குகள் பெற்றார். வெற்றி பெற்ற உமாவிற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்படும் என அறிவித்தனர்.
இதையும் படிங்க: