சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 220ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று கயத்தாரில் உள்ள மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு, விளாத்திகுளம் தொகுதி எம்எல்ஏ சின்னப்பன் ஆகியோர் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனைத்தொடர்ந்து அமைச்சர் கடம்பூர் செ. ராஜு செய்தியாளர்களிடம் பேசுகையில், "ராஜிவ்காந்தி மரணம் குறித்து ஆணையம் அமைக்கப்பட்ட பின்னர் இது குறித்து சீமான் கருத்து கூறுகிறார். தான்தோன்றித்தனமாக பேசிவருகிறார். அவருக்கு பதில் சொல்லி எங்களது தரத்தைக் குறைத்துக் கொள்ள நாங்கள் விரும்பவில்லை" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசுகையில், இடைத்தேர்தலில் பாஜக அதிமுகவுடன் இணக்கமாகத்தான் செயல்பட்டுவருவதாகக் குறிப்பிட்டார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரைக்கு வந்தபோது பாஜக தொண்டர்கள் வந்திருந்ததாகக் கூறிய கடம்பூர் ராஜு, இந்தக் கூட்டணியை எப்படியாவது உடைத்துவிட வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சிகளால் வதந்தி பரப்பப்படுகிறது என்றார்.
மேலும், நிச்சயமாக அவர்களது கனவு நடக்காது என சொன்ன அவர், இந்த இரண்டு தொகுதிகளிலும் மகத்தான வெற்றிபெறுவோம் எனத் தெரிவித்தார்.