தூத்துக்குடி மாவட்ட மக்களின் அடிப்படைத் தேவைகள், கோரிக்கைகள் ஆகியவை குறித்து மனு அளிப்பதற்காக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்துரியை சந்தித்துப் பேசினார். அப்போது, வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, மருத்துவ வசதி, குடிநீர் உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்துரியிடம், கனிமொழி எம்.பி. வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "ஊராட்சி சபைக் கூட்டங்களில் மக்களிடமிருந்து பெறப்பட்ட ஏறத்தாழ 600 கோரிக்கை மனுக்களை, மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளோம். இதில், தண்ணீர் வசதி, முதியோர் உதவித்தொகை என அத்தனை மனுக்களையும் தந்துள்ளோம். இவற்றில் தண்ணீர் பிரச்னை குறித்து விவரமாக பேசியுள்ளோம். அதற்கு முன்னுரிமை கொடுத்து சரி செய்து தர வேண்டும் என்று கூறியுள்ளோம்.
எந்த விதத்திலாவது இந்தியைக் கொண்டு வந்துவிட வேண்டும் என்று மத்திய அரசு யோசித்துக் கொண்டிருக்கிறது. மக்கள் எப்போதும் கண்காணிப்புடன் இருக்க வேண்டிய அவசியத்தை மத்திய அரசு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது" என்றார்.