கடந்த 2018ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஆட்சியரிடம் மனு கொடுக்க சென்றவர்கள் மீது காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, தமிழ்நாடு அரசு, அரசாணை பிறப்பித்து ஸ்டெர்லைட் ஆலையை மூடியது.
துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் மூன்றாமாண்டு நினைவு தினம் இன்று (மே.22) அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்விற்கு தலைமை தாங்கிய கனிமொழி எம்.பி, உயிரிழந்தவர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், தி.மு.கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்விற்கு பின்னர் செய்தியாளர்களிடம் கனிமொழி எம்.பி. பேசுகையில், ’ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் அவரவர் கல்வித் தகுதியின் அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என நீண்ட நாள் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை முதலமைச்சர் நிறைவேற்றியுள்ளார்.
பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், மத்திய புலனாய்வு துறை மூலம் பதிவு செய்யப்பட்ட வழக்குகள், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை தவிர ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட மற்ற அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 14ஆம் தேதி, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம், முதலமைச்சரிடம் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்ததன் படி, ஒரு வாரத்திற்குள் அதன் மீது ஆய்வு நடத்தி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறவும், உயிரிழ்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு வேலை வழங்கவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்’ என்றார்.
இதையும் படிங்க:ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்காமல் இருப்பதே உயிரிழந்தோருக்கான உண்மையான அஞ்சலி - டிடிவி