தூத்துக்குடி: திருச்செந்தூர் பேருந்து நிலையம் அருகில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ஆதரவற்றோருக்கான மனநல காப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை கனிமொழி எம்.பி. ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து கனிமொழி எம்.பி. செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ''கள்ளச்சாராயத்தை ஒழிக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுத்துவருகிறார். நிச்சயமாக தமிழ்நாட்டில் விரைவில் கள்ளச்சாராயம் விற்பனை முழுவதுமாக களையப்படும்'' என நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் அவர், ''பொதுமக்களும் தங்களின் உடல் நலம் கருதி அக்கறையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்கவேண்டும்'' என கேட்டுக்கொண்டார். மேலும் கள்ளச்சாராயம் விவகாரத்தில் காவல்துறையினர் பலரையும் கைது செய்திருக்கிறார்கள் எனவும்; தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் நிச்சயமாக முற்றிலும் ஒழிக்கப்படும் என முதலமைச்சர் கூறியிருக்கிறார் எனத் தெரிவித்தார்.
பூரண மதுவிலக்கு குறித்த செய்தியாளரின் கேள்விக்கு, திமுக எந்த தேர்தலில் பூரண மதுவிலக்கு வாக்குறுதி அளித்தது எனப் பதில் கேள்வி எழுப்பிய அவர், சட்டமன்றத் தேர்தலில் பூரண மதுவிலக்கு குறித்து திமுக எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை என அவர் உறுதிபடத் தெரிவித்தார். மேலும் கர்நாடக முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் தமிழக முதலமைச்சருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்பது தவறானது எனவும்; முக்கியத்துவம் கருதிதான் கர்நாடக முதலமைச்சரும் காங்கிரஸ் தலைவரும் நிச்சயமாக வரவேண்டும் என அழைத்ததால் தான் தமிழக முதலமைச்சர் கலந்துகொண்டார் என விளக்கம் அளித்தார்.
மேலும், ரூ 2,000 பண மதிப்பிழப்பு குறித்து திமுக மீதான அண்ணாமலையின் விமர்சனத்திற்குப் பதிலளிக்க அவர் மறுத்துவிட்டார். அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் கனிமொழி எம்.பி., யிடம் கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர்களை திமுகவினர் தள்ளியதால் சலசலப்பு ஏற்பட்டது. மேலும், கனிமொழியிடம் மதுவிலக்கு குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளரை திமுகவினர் அழைத்து விசாரித்ததாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வு தற்பொழுது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக உள்ளிட்ட கட்சிகள் தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் என அறிவித்து இருந்தன. ஆனால், அந்த தேர்தலில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என அறிவித்து இருந்த அதிமுக வெற்றி பெற்று, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி 500 மதுக்கடைகளை மூடி இருந்தார்.
ஆனால், கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது மக்களைக் கவரும் வகையில் பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை அறிவித்து இருந்த திமுக, பூரண மதுவிலக்கு சம்பந்தமாக எந்த அறிவிப்பும் செய்யாமல் இருந்தது. ஆனால், எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் போது, தமிழகத்தில் மது அருந்தும் பழக்கத்தால் இளைய சமுதாயம் கெட்டுப்போவதாகவும், சரியாக வேலைக்குச் செல்வது இல்லை என்றும் திமுக கடுமையாக விமர்சித்து போராட்டங்களையும் நடத்தி இருந்தது.
மேலும் கனிமொழி, மதுவால் தமிழகத்தில் அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும், இதனால் தமிழகத்தில் அதிக அளவில் விதவைகள் இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார். இதனால் கனிமொழியை நோக்கி பூரண மதுவிலக்கு குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது தமிழகத்தில் கள்ளச்சாராயத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் தமிழகத்தில் பூரண மதுவிலக்கினை திமுக கொண்டு வருமா என்ற கேள்வியை எழுப்பி வருகிறது.