வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான குமரி, தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த சில தினங்களாகவே கனமழை பெய்துவருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையால் பல்வேறு இடங்களில் குடியிருப்புப் பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன.
மேலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட சின்னகண்ணுபுரம், வி.எம்.எஸ். நகர் உள்ளிட்ட பகுதிகள் தனித் தீவுகளாகக் காட்சியளிக்கிறது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சின்னகண்ணுபுரம், வி.எம்.எஸ். நகர் உள்ளிட்ட பகுதிகளை தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, சட்டப்பேரவை உறுப்பினர் கீதா ஜீவன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஆய்வினைத் தொடர்ந்து, குடியிருப்புப் பகுதிகளில் சூழ்ந்துள்ள மழைநீரை வெளியேற்ற ஜேசிபி, கிட்டாச்சி இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தூத்துக்குடியிலிருந்து மீளவிட்டான் செல்லும் சாலையில் உள்ள மழைநீர் வரத்துக் கால்வாயை தூர்வாருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்த கனிமொழி, நிவாரணப் பணிகளைத் துரிதமாக மேற்கொள்ளவும் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தரவும் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இதையும் படிங்க: மழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து சிறுவன் உயிரிழப்பு!