தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கனிமொழி இன்று மாலை 4 மணி முதல் தூத்துக்குடி நகர பகுதி மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் தனது தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார்.
அவர் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி ஸ்டேட் பேங் காலனி, அழகேசபுரம், மட்டகடை உள்பட பல்வேறு இடங்களில் தேர்தல் பரப்புரை செய்தார்.அப்பொழுது அவர் பேசுகையில்,
மத்தியில் இருக்கக்கூடிய பாஜக ஆட்சி நீட் தேர்வு மூலமாக தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை புதைத்துவிட்டனர். அமைதியான முறையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி 13 பேரை சுட்டு கொன்றுவிட்டனர்.
அதுமட்டுமில்லாமல், தொடர்ந்து மக்கள் விரோத செயல்களை மத்திய அரசு மக்கள் மீது திணித்து வருகிறது. தமிழகத்தில் மத்திய பாஜக அரசின் பினாமி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கே விவசாயம் பாதிக்கப்பட்டு விவசாயிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
கஜா புயல் மற்றும் ஒகி புயல் ஆகிய சமயங்களில் தமிழகத்தின் பக்கம் திரும்பி பக்கம் கூட வராத மோடியும், அமித்ஷாவும் தேர்தல் என்று அறிவித்ததும் பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோர் தமிழகத்திற்கு பலமுறை வந்து விட்டனர்.
பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா 14-வது நிதிக் குழு அறிக்கையின்படி, தமிழகத்துக்கு 5 லட்சத்து 40 ஆயிரம் கோடியை ஒதுக்கி உள்ளதாக கூறியுள்ளார். ஆனால் உண்மையில் அவர்கள் ஒதுக்கியது வெறும் 81 ஆயிரம் கோடி மட்டுமே.
எனவே மத்தியில் தமிழக மக்களின் உணர்வினை மதிக்கக் கூடிய ஆட்சியை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கு ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி மத்தியில் அமைய வேண்டும். தமிழகத்தில் திமுக ஆட்சி மலர வேண்டும். அதற்கு பொதுமக்களாகிய வாக்காளர்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யவேண்டும் என அவர் தெரிவித்தார்.