தூத்துக்குடி: கோவில்பட்டி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் வக்கீல் தெருவில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்கு நகர திமுக செயலாளர் கருணாநிதி தலைமையில், ஒன்றியச் செயலாளர் முருகேசன் முன்னிலையில் தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி கலந்துகொண்டு கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில், திமுக மற்றும் காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து கனிமொழி எம்.பி., பேசுகையில், "உள்ளாட்சிப் பதவிகளுக்குப் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை என சில பேர் மனவருத்தத்தில் இருக்கலாம். அவர்களையும் உங்களோடு இணைத்துக் கொள்ளுங்கள். அவர்களின் உழைப்பு என்பது மிக முக்கியமானது.
நமக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது என்பதற்காக நாம் அவர்களை விட உயர்ந்தவர்கள் இல்லை. நம்மை விட உயர்ந்தவர்கள் இருக்கின்றனர். நமக்கு ஈடாக உழைப்பவர்களும் உள்ளனர்.
அவர்களையும் நம்முடன் இணைத்துக் கொண்டு களத்தில் வெற்றி காண வேண்டும். நம்முடைய வெற்றி என்றால், அது 100 விழுக்காடு வெற்றியாக இருக்க வேண்டும்" என்றார்.
இந்தக் கூட்டத்தில், திமுக பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி உள்படப் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: வேளாண் சட்டம்போல நீட் சட்டமும் திரும்பப் பெறப்படும் - அழகிரி நம்பிக்கை