தூத்துக்குடி காமராஜ் கல்லூரி நிர்வாகத்தை கலைத்துவிட்டு 2 மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து டி.ஆர். தமிழரசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ’பிற்பட்ட சாதாரண மக்களும் உயர்கல்வி பெற வேண்டும் என்ற உயரிய நோகத்தில் 1965ஆம் ஆண்டில் தூத்துக்குடி கல்விக்குழு சார்பில் காமாராஜர் கல்லூரி தொடங்கப்பட்டது. இந்த கல்லூரியானது தூத்துக்குடி வடதிசை காரப்பேட்டை நாடார் மகமை சங்கம், விருதுநகர் நாடார் மகமை, தூத்துக்குடி நாடார் மகமை, திருமங்கல நாடார் மகமை, அருப்புக்கோட்டை நாடார் மகமை சங்கங்கள் ஒன்றிணைந்து 52 பேரை தேர்ந்தெடுத்து, அதன் மூலம் காமராஜர் கல்லூரி நிர்வாகம் நடத்தப்பட்டு வருகிறது.
1965ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை, இந்த முறை சிறப்பாக செயல்பட்டு வந்த நிலையில், 4 உறுப்பினர்கள் மட்டுமே கொண்ட ஸ்பின்னிங் மில் நிறுவனத்தினர் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் நிர்வாகத்தைக் கொண்டு வந்து, கல்விக்குழு விதிமுறைகளுக்கும் சட்டத் திட்டங்களுக்கு எதிராக, தேர்தல் நடத்தி கல்லூரி முதல்வரைத் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.
அனைத்து சமுதாய மாணவர்களும் குறைந்த கல்விக் கட்டணத்தில் கல்வி பெறும் வகையில் இயங்கி வந்த கல்லூரியை, ஏழை எளிய மாணவர்கள் கல்வி கற்க முடியாத அளவிற்கு கல்விக் கட்டணத்தை உயர்த்தி விட்டனர். மேலும் கல்லூரியை ஒரு வர்த்தக நிறுவனமாக மாற்றிவிட்டனர். இதை எதிர்த்து நாடார் மகமைகள் உச்சநீதிமன்றம், கல்லூரி கல்வி இயக்குநரகம், மாவட்ட பதிவாளர் ஆகியோரிடம் புகார் அளித்து கடந்த 5 வருட காலமாக சட்டப் போராட்டம் நடத்தி வந்தன.
இறுதியாக மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், காமராஜ் கல்லூரி நிர்வாகத்தை கலைத்துவிட்டு வழக்கறிஞர் சொர்ண லதாவை வழக்கறிஞர் ஆணையராக நியமித்து, 2 மாதத்திற்குள் கல்விக்குழுமத்திற்கு மறுதேர்தல் நடத்தவும், அதுவரை வழக்கறிஞர் ஆணையரே கல்லூரி நிர்வாகத்தை கவனிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக’ தெரிவித்தார்.
இதையும் படிக்கலாமே: முதியோர்களோடு கை கோருங்கள்! - கை கழுவாதீர்கள் பிள்ளைகளே!