தூத்துக்குடி: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கலைஞர் நூற்றாண்டு விழா பல்வேறு நிகழ்ச்சிகள் மூலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நூற்றாண்டு விழா பட்டிமன்றம் தூத்துக்குடி டூவிபுரத்தில் வைத்து நடைபெற்றது. திண்டுக்கல் ஐ.லியோனி நடுவராக பங்கேற்ற இந்த பட்டிமன்றத்தில் பேச்சாளர்களாக நாக நந்தினி, இனியவன், மதுரை சங்கர், விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மக்கள் நலத்திட்டங்களா, திராவிடக் கொள்கைகளா என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த பட்டிமன்றத்தில் ஒவ்வொருவரும் திராவிடக் கொள்கைகள் மற்றும் கலைஞரால் கொண்டுவரப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் பற்றி காரசாரமாக எடுத்துரைத்தனர்.
பின்னர் திண்டுக்கல் ஐ.லியோனி பேசுகையில், ''தமிழக முதலமைச்சரை பதவி பிரமாணம் செய்த ஆளுநர் எம்.கே ஸ்டாலின் என கூற வைத்தார். ஆனால், ஆளுநர் கூறியதை கூறாமல் 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்' எனும் நான் என அன்றே தான் யார் என்பதை நிலைநாட்டியதோடு, ஆளுநருக்கு கட்டுப்பட்டு இருக்க நான் ஒன்றும் பொம்மை அல்ல, ஜனநாயகத்தின் காவலன் என பதவிப்பிரமாணம் செய்த அன்றைக்கே நிலை நாட்டியவர் தான் முதலமைச்சர் ஸ்டாலின்.
இதற்குப் பெயர் தான் திராவிடக் கொள்கை, இன்று நமக்கு கிடைத்திருக்கக் கூடிய பதவி தோளில் போட்டு இருக்கக்கூடிய துண்டு, கொள்கை என்பது இடுப்பில் கட்டியிருக்கும் வேட்டி. துண்டு போனால் கூட நாம் உயிரோடு வாழ்ந்து விடலாம். ஆனால், இடுப்பில் கட்டியிருக்கும் வேட்டி பறிபோனால் மானம் பறிபோகி விடும். எனவே, கொள்கைக்கு ஒரு பிரச்னை என்றால் துண்டை தூக்கி எறிய வேண்டும் என கொள்கையோடு வாழ்ந்தவர் கருணாநிதி.
ஒவ்வொரு மேடையிலும் ஹிந்தியில் எழுதி வைத்த தமிழ் கவிதைகளை படிக்கிறேன் என்ற பெயரில் தமிழை கொலை செய்து வரும் பிரதமர் மோடி, நீங்கள் தமிழ்ப் பாட்டை மேடையில் பாடும்போது சந்தோஷமாக இருந்தாலும் அதே தமிழ் மொழிக்கு, தமிழ் வளர்ச்சிக்காக ஹிந்தி பேசும் மாநிலங்களில் இந்திக்கு கொடுக்கும் வளர்ச்சி தொகையை தமிழுக்கும் கொடுக்க வேண்டும். சமஸ்கிருதத்தை வளர்க்க ஆயிரம் கோடி ரூபாயை கொடுத்து விட்டு, தமிழ் வளர்ச்சிக்கு வெறும் 15 கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பது நாடகம்.
இந்த நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் அக்கவுண்டில் 15 லட்சம் ரூபாய் முதலீடு செய்வதாக மோடி கூறினார். 10 வருடம் ஆக போகிறது, 5 காசு கூட போடவில்லை. ஹிந்தி தெரிந்தால் வேலை கிடைக்கும் என தவறான அணுகுமுறையைக் கொண்டு வந்து ஹிந்தியை திணிப்பதை எதிர்த்த ஒரே இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் தான்.
ஹிந்தியின் மேல் எந்த கோபமும் இல்லை, தேவைப்பட்டால் படித்துக் கொள்ள வேண்டியது தான். மும்பையில் வாழ்வது என்றால் கண்டிப்பாக ஹிந்தி தெரிந்தே ஆக வேண்டும், ஆனால் தமிழகத்தில் இருப்பவர்களிடம் ஹிந்தியை படித்தே ஆக வேண்டும் என்பதை திணிப்பதை தான் நாங்கள் எதிர்க்கிறோம்.
மோடி பிரதமராக இருக்க தகுதியற்றவர் என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுருக்கிறார். அடுத்த பிரதமர் தமிழகத்திலிருந்து தான் என கூறியிருக்கிறார் அமித்ஷா. அடுத்து வரக்கூடிய பிரதமரை உருவாக்குகின்ற தலைவர் மு.க.ஸ்டாலின். பிரதமரை உருவாக்குகின்ற வியூகம் தளபதி மு.க. ஸ்டாலின் வகுத்த வியூகம் தான்” எனத் தெரிவித்தார்.