தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள வானரமுட்டி, சங்கரலிங்கபுரம், காளாம்பட்டி, அழகாபுரம், கல்லூரணி, குமரெட்டியாபுரம் ஆகியப் பகுதியில் ஒன்றிய மற்றும் மாவட்ட கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது, அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ' குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக மக்களிடம் விளக்கம் கேட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே, திமுக மக்களின் உணர்வுகளைத் தூண்டி அவர்களை பலியாக்கக் கூடாது. ஒரு சட்டம் குறித்து விவாதிக்க வேண்டும் என்பதற்காகத் தான் அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒரு சட்டம் இயற்றப்பட்டால் நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் விவாதிக்கலாம். வெளிநடப்பு செய்யலாம். முற்றுகைப் போராட்டம் நடத்தலாம். தர்ணா செய்யலாம். ஆனால் மக்கள் உணர்வுகளைத் தூண்டி அரசியல் ஆதாயம் தேடுவது நல்ல தீர்வாக இருக்காது. இருமுனை கத்தி போன்றது வன்முறை. அது திருப்பி அது நம்மையேத் தாக்கும் என்று பேரறிஞர் அண்ணா கூறியுள்ளார்.
இதை அண்ணாவின் பெயரைச் சொல்லி இயக்கம் நடத்தும் திமுக கவனத்தில் கொள்ள வேண்டும். அதேபோல், இந்த பிரச்னைக்கும் வன்முறை தீர்வாகாது. மக்களைச் சந்திக்க திமுக தயாராக இல்லை. அதனால் தான் உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது.
தேர்தலை அறிவிக்க சொல்வதும், அதை எதிர்த்து நீதிமன்றம் செல்வதும் திமுகவுக்கு வாடிக்கையான ஒன்று தான். அதேபோல் தமிழர்களுக்கு எதிராக மத்திய அரசு உள்ளதாக பொய்யான பிரசாரத்தின் மூலம் திமுக நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது. அது உண்மை இல்லை என்று தெரிந்தவுடன், இரண்டு இடைத்தேர்தலில் மக்கள் அதிமுகவை வெற்றிபெறச் செய்தனர்.
மேலும் திமுக நாடாளுமன்றத் தேர்தலில் பொய்யான வாக்குறுதியைக் கொடுத்தது மக்களுக்கு தெரிந்து விட்டது. இதனால், மக்களைச் சந்திக்க திமுகவுக்கு மட்டுமல்ல, அவர்களுடைய சின்னத்திற்கும் பயமாக உள்ளது' என்றார்.