தூத்துக்குடி, கோவில்பட்டியில் இந்திய மருத்துவ சங்கக் கிளை சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு, தூய்மைப் பணியாளர்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்கினார்.
தொடர்ந்து, வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் வானரமுட்டி, கழுகுமலை, செட்டிக்குறிச்சி, கயத்தாறு, கடம்பூர் ஆகிய இடங்களில் தூய்மைப் பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், மாற்றுத் திறனாளிகள், அர்ச்சகர்கள், கோயில் பணியாளர்கள் ஆகியோருக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சிகளில் கோட்டாட்சியர் விஜயா, வட்டாட்சியர்கள் பாஸ்கரன், மணிகண்டன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சந்திரசேகர், மோட்டார் வாகன ஆய்வாளர் நாகூர் கனி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், சசிகுமார், நகராட்சி ஆணையாளர் ராஜாராம், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் சத்யா, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பிரியா குருராஜ், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் கஸ்தூரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, “தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 3 ஆயிரத்து 386 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 27 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு பெண் உயிரிழந்த நிலையில் 25 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது மருத்துவமனையில் ஒருவருக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவரும் ஓரிரு நாள்களில் குணமடைந்து வீடு திரும்பும் நிலையில் உள்ளார்.
நடிகர் கமல்ஹாசனுக்கு எந்த நேரத்தில் எதைப் பேச வேண்டும் என்பது தெரியவில்லை. சினிமாவில் வசனம் பேசுவது போல் பேசி வருகிறார். இன்று உலகம் இதற்கு முன் கண்டிராத பேரிடரை சந்தித்து வருகிறது. இதில் அரசியல் மேதாவிகளாய் இப்படி கருத்து சொல்வது சரியா? இதை அவரது எண்ணத்திற்கே விட்டு விடுகிறேன்.
அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளே கரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடி வரும் நிலையில், இந்தியா சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் பொதுநலவாதிகள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் பாராட்டும் வகையில் இந்த அரசு தற்போது செயல்பட்டு வருகிறது.
”இந்த சூழ்நிலையிலும் am, pm என்று பாராமல் உழைக்கின்ற CM” என்று மக்கள் பாராட்டி வருகின்றனர். சுகாதாரத்துறை, உள்ளாட்சித் துறை, காவல்துறை என பல துறையினர் ஒருங்கிணைந்து அர்ப்பணிப்போடு செயலாற்றி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கரோனாவால் ஒரு உயிர்கூட போகக் கூடாது என்பதில் இந்த அரசு முனைப்போடு இருக்கிறது என்று நம் முதலமைச்சர் கூறி வருகிறார். நடிகர் கமல்ஹாசன் கூறுவது போல் அன்றி, கமல்ஹாசன் தான் பால்கனியில் இருந்து மக்களிடம் பேசக் கூடியவர், நாங்கள் மக்களோடு இருந்து பால்கனியை பார்க்கின்றவர்கள். இந்த நேரத்தில் இப்படிப்பட்ட அரசியல் கருத்துக்கள் சரியானவை அல்ல என்பதே எங்களது கருத்து” எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து நடிகையும், மனைவியுமான ஜோதிகாவிற்கு ஆதரவான நடிகர் சூர்யாவின் கருத்து குறித்து கேட்டபோது, ”இந்த நேரத்தில் விளம்பரத்திற்கு வேண்டுமானால் இது போன்ற கருத்துகள் உதவலாம்” எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'ஏழைகளுக்கு உணவளிப்போம்' திட்டத்தை தொடங்கிய ஸ்டாலின்