தூத்துக்குடி: சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் போலீசாரால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்து முடிந்த மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் ஜெயராஜ் பென்னிக்ஸ் திருவுருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர், காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டு இயக்கத்தின் சார்பாக தமிழ் தேசிய விடுதலை இயக்கம் தியாகு, வழக்கறிஞர் பிரிட்டோ, பேராசிரியை பாத்திமா பாபு, மக்கள் கண்காணிப்பு இயக்கம் பிரதீப், பச்சை தமிழகம் நிறுவனர் உதயகுமார், மனித உரிமைகளுக்கான குடிமக்கள் இயக்கம் இசக்கிமுத்து இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் கூட்டமைப்பு பீட்டர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் இணைந்து சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு வந்தனர்.
அனைத்து காவல் நிலையங்களிலும் புலனாய்வு நிறுவனங்களிலும் கட்டாயமாக சிசிடிவி கேமரா பொருத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் நகலை காவல் நிலையத்தில் வழங்கி ஆய்வு செய்ய உள்ளதாக போலீசாரிடம் கூறினர். சாத்தான்குளம் டிஎஸ்பி அருள் தலைமையிலான 30க்கும் மேற்பட்ட போலீசார் அவர்களை வழிமறித்து காவல் நிலையம் உள்ளே செல்ல அனுமதி மறுத்தனர். பின்னர் டிஎஸ்பி அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அங்கும் காவல் நிலையத்தில் ஆய்வு செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.
இதையும் படிங்க: ரூ.37 கோடி மதிப்பில் தரமற்ற மக்காசோளம்; குடோனுக்கு சீல் வைத்த அதிகாரிகள்!
பின்னர் காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டு இயக்கத்தின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் தியாகு செய்தியாளர்களிடம்
கூறுகையில், ”காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டமைப்பு சார்பில் இன்றிலிருந்து மூன்று நாட்கள் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள காவல் நிலையங்களில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய உள்ளோம்.
அதன்படி ஜெயராஜ், பென்னிக்ஸ் நினைவு தினமான இன்று சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளதா என்பதை பார்வையிட வந்தோம். அதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். காவல் நிலையத்தில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது என்ற வாசகம் எதுவும் ஒட்டப்படவில்லை. டிஎஸ்பி அலுவலகத்திலும் சிசிடிவி கேமரா பொருத்தப்படவில்லை.
காவல் நிலையங்களிலும், அதைப் போன்ற அனைத்து அலுவலகங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு மீறப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்ற தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: கடை மூடியது தெரியாமல் மது வாங்க வந்த நபர் - இனிப்பு வழங்கி அனுப்பி வைத்த DYFI