கோவில்பட்டியில் நான்கு கோடி மதிப்பில் புதிதாக அமைக்கப்படவிருக்கும் கால்நடை பல்கலைக் கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலைய கட்டுமான இடத்தை கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இன்று (டிச.24) நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “கோவில்பட்டியில் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் 2.8 ஏக்கர் நிலத்தில் 52 சென்ட் நிலத்தை முதல்கட்டமாக கையகப்படுத்தி கால்நடை பல்கலைக் கழகத்தின் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை அமைக்க இருக்கிறோம். அதற்காக தமிழ்நாடு அரசு ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கி இருக்கிறது. நான்கு கோடி மதிப்பில் கால்நடை ஆராய்ச்சி மையம் கோவில்பட்டியில் அமைய உள்ளது. நடப்பாண்டிலேயே தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் 2.5 கோடி மதிப்பில் ஆராய்ச்சி மையம் உருவாக்க உள்ளோம்.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக எண்ணிக்கையிலான நாட்டு வகை கால்நடை இனங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. நாட்டு வகை ஆடுகள், மாடுகள் என எந்தவொரு கால்நடை இனங்களும் அழிந்துவிடக் கூடாது என்பதற்காக கால்நடை ஆராய்ச்சி நிலையங்கள் அதிகளவில் அமைக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் கால்நடைகளை பெருக்கி குறைந்த விலையில் விவசாயிகளுக்கு கொடுக்க தேவையான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நாட்டு வகை ஆடுகள், மாடுகள், வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகள் அனைத்தும் அழியக் கூடாது என்பதற்காக கால்நடை ஆராய்ச்சி நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் கால்நடைகளை உருவாக்கி விவசாயிகளுக்கு குறைந்த விலையில் கொடுப்பதற்கான பணிகளும் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.கடந்த 11 ஆண்டுகளாக 12 ஆயிரம் மதிப்பில் அரசின் சார்பில் ஆடுகளை கொள்முதல் செய்து, மக்களுக்கு கொடுத்திருக்கிறோம். கால்நடை துறை சார்பில் மகளிர் பயன்படக் கூடிய திட்டங்கள் அனைத்தையும் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம்.
ஜல்லிக்கட்டை பொருத்தவரை தமிழ்நாடு அரசும், எங்கள் துறையும் அதற்கு தேவையான முழு ஒத்துழைப்பை கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இந்த ஆண்டு அதற்குரிய பணிகள் அனைத்தும் வழக்கம்போல நடைபெற்று வருகின்றன. மாநிலத்தில் எங்கெல்லாம் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுமோ அங்கெல்லாம் இந்தாண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும். அதற்குரிய விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, உரிய அனுமதி அளிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கரோனா காலமாக இருந்தாலும் கூட நடைமுறையில் கொடுக்கின்ற திட்டங்கள் எதையும் நிறுத்தக் கூடாது என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். கால்நடை துறையைப் பொறுத்தவரை கடந்த ஆண்டு 900 நபர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்தோம். இந்தாண்டு அவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்வு வைக்கப்பட்டு மருத்துவர்கள் தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
கடந்த ஆண்டு கால்நடை மருத்துவர்கள், உதவிப் பணியாளர்கள் என 900 நபர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்தோம். இந்தாண்டு டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. எங்கெல்லாம் கால்நடை மருத்துவர்கள், உதவிப் பணியாளர்கள் தேவைப்படுகிறார்களோ அங்கெல்லாம் டி.என்.பி.எஸ்.சி தேர்வில் தேர்ச்சிப் பெறுபவர்களை நியமனம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது” என்றார்.
இந்த சந்ததிப்பின்போது, தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் சின்னப்பன் ஆட்சியர் செந்தில்ராஜ், வருவாய் கோட்டாட்சியர் விஜயா உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க : குடிநீர் வழங்கக்கோரி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை!