தூத்துக்குடி: தூத்துக்குடி ராஜீவ் நகரைச் சேர்ந்தவர் சரவணன். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், இவருக்கு சமீபத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த சரவணன் மருத்துவமனை அருகே உள்ள அம்மா உணவகத்தில் இன்று (செப்.16) தனது குடும்பத்தினருக்காக நான்கு சாம்பார் சாதங்களை வீட்டிற்கு வாங்கிச் சென்றுள்ளார். பின்னர் வீட்டில் தனது மனைவியுடன் சேர்ந்து சாம்பார் சாதத்தை சரவணன் சாப்பிட்டுள்ளார்.
இருவரும் இந்த உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, சாதத்தில் காய்கறிகள் போல நீளமாக ஏதோ ஒன்று தட்டுப்பட்ட நிலையில், சாப்பாட்டில் அரணை (பாம்புராணி) இறந்து கிடந்தது தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து, பதட்டமான சரவணன், தான் சாப்பிட்ட சாம்பார் சாதத்தில் இருந்து விஷம் பரவக்கூடாது என முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
அதைத் தொடர்ந்து, இது குறித்து அம்மா உணவக அலுவலர்களிடம் எச்சரிக்கை விடுப்பதற்காக சாப்பாட்டில் இருந்த அரணையுடன் சாதத்தை வாங்கிய அம்மா உணவகத்திற்குச் சென்றுள்ளார். ஆனால், அம்மா உணவகம் மூடப்பட்டு இருந்த நிலையில், செய்வதறியாமல் முதலுதவிக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்குச் சென்றுள்ளார்.
மேலும், இது குறித்து சரவணன் கூறுகையில், "காய்ச்சல் காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தேன். என் குடும்பத்தினருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், அவர்களுக்கும் சேர்த்து அரசு மருத்துவமனைக்கு அருகில் இயங்கி வரும் அம்மா உணவகத்தில் இருந்து உணவு வாங்கிச் சென்றேன். பின்னர், வீட்டிற்குச் சென்று சாப்பிட்டு கொண்டிருந்தபோதுதான், சாப்பாட்டில் அரணை இருப்பதை பார்த்தேன்.
இதனைக் கண்டு அச்சம் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டேன். பின்னர் இது குறித்து அம்மா உணவக அலுவலர்களிடம் தகவல் தெரிவித்து எச்சரிக்கை செய்வதற்காக வந்து பார்த்தபோது, உணவகம் அடைக்கப்பட்டிருந்தது. இதை சாப்பிட்டு எனக்கும், என் குடும்பத்திற்கும் ஏதாவது நேர்ந்தால் யார் பொறுப்பெடுத்து கொள்வார்கள்? அஜாக்கிரதையாக செயல்பட்ட அலுவலர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: "சனாதனம் இந்துக்களின் நித்தியக் கடமை.. கருத்து சுதந்திரத்தை கொண்டு காயப்படுத்தாதீர்கள்" - சென்னை உயர்நீதிமன்றம்!