தூத்துக்குடியில் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கருத்தரங்கு நடைபெற்றது. இந்திய தொழில் கூட்டமைப்பு தூத்துக்குடி தலைவர் வெயிலா கே.ராஜா, இந்திய விண்வெளி ஆய்வு மைய இயக்குனர் சுதீர் குமார், தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் செந்தில்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், தமிழ்நாடு ஸ்டார்ட் அப் மற்றும் இநோவேஷன் கூடுதல் முதன்மை செயல் அலுவலர் சிவராஜு இணையதளம் வாயிலாக கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கினார். நிகழ்ச்சிக்கு பின் இந்திய விண்வெளி ஆய்வு மைய இயக்குனர் சுதீர் குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் பேசுகையில், ”சிறிய வகை செயற்கை கோள் ஏவுவதற்காகவும், குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காகவும் நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிவடைந்துவிட்டன. இங்கு திட்டப் பணிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியதால் திட்டப்பணிகள் விரைவில் தொடங்கப்படும். இன்னும் ஒரு சில வருடங்களில் செயற்கைக்கோள் ஏவப்படும்.
குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதன் மூலமாக சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் இதன் மூலமாக பயன்பட முடியும். போக்குவரத்து, மின்சாரத்துறை, மின்னணு, உணவு உற்பத்தி நிறுவனங்கள் என அனைத்து துறைகளும் ராக்கெட் ஏவுதளம் மூலமாக பயன்பட முடியும். சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பல்வேறு வாய்ப்புகள் இந்த நிறுவனத்தின் மூலமாக கிடைக்கும்.
ராக்கெட் ஏவுதள கட்டுமானப்பணியின் போதும், கட்டுமானப் பணிகள் முடிந்த பின்னும் தொழில் நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் பயன்பெறும். ஸ்டார்ட்அப் இந்தியா, மேக்இன் இந்தியா திட்டத்தின் மூலமாக தொழில் தொடங்கும் வெளியூரைச் சார்ந்த தொழில் நிறுவனங்கள் மட்டுமன்றி உள்மாவட்டத்தைச் சார்ந்த சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவு தளத்திற்குத் தேவையான உற்பத்தி தளவாடங்களை வழங்க ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.
இந்தத் தொழில் நிறுவனங்கள் விண்வெளி நிறுவனத்தோடு தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள முடியும். இதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான சோதனைப் பணிகள் இன்னும் ஒரு சில மாதங்களில் தொடங்கும்'' என்று கூறினார்.
இதையும் படிங்க: அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துக்குவிப்பு வழக்கு: அமலாக்கத்துறை மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!