கடந்தாண்டு ஜூன் மாதம் பிரதமர் மாலத்தீவிற்கு அரசுமுறைப் பயணமாக சென்றபோது, இருநாடுகளுக்கும் இடையே வர்த்தகப் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் ஒப்பந்தங்கள் போடப்பட்டன.
மத்திய வெளிவிவகார அமைச்சர் ஜெயசங்கர், மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சருடன் காணொலி காட்சி மூலம் கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் வெளியிட்ட அறிக்கையினை உறுதிபடுத்தும் வகையில், மத்திய கப்பல் துறை இணையமைச்சர், ரசாயனம் மற்றும் உரங்கள் இணை அமைச்சர் மன்சுக் மண்டவியா மற்றும் மாலத்தீவு நாட்டின் போக்குவரத்து மற்றும் பயணிகள் விமானப்போக்குவரத்து அமைச்சர் ஆயிஷத் நஹீலா ஆகியோர் இணைந்து தூத்துக்குடியிலிருந்து கொச்சின் வழியாக மாலத்தீவு குல்ஹதுபுஷி மற்றும் மாலே துறைமுகங்கள் வரையிலான சரக்கு போக்குவரத்து சேவையை காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தனர்.
இக்கப்பல் சேவையை இந்திய கப்பல் கழகம் மாதத்திற்கு மூன்று முறை இயக்கும். இச்சேவையின் மூலம் குறைந்த செலவில் சரக்குகளை நேரடியாக இந்தியாவிலிருந்து மாலத்தீவிற்கு எடுத்துச் செல்லமுடியும்.
இந்நிகழ்வில் பேசிய மன்சுக் மண்டவியா, "இந்தியாவிற்கும் மாலத்தீவிற்கும் இடையேயான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கு இக்கப்பல் சேவை மேலும் ஒரு மைல்கல்லாக அமையும். இக்கப்பல் சேவை இருதரப்பு வர்த்தகத்தை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் மாலத்தீவு மற்றும் இந்திய மக்களிடையே நல்உறவினை மேம்படுத்துவதற்கு உறுதுணையாக அமையும்" என்றார்.
தொடர்ந்து, மாலத்தீவின் போக்குவரத்து மற்றும் பயணிகள் விமான போக்குவரத்து அமைச்சர் ஆயிஷத் நஹீலா கூறுகையில், இந்தியாவிற்கும் மாலத்தீவிற்கும் இடையேயான நெருங்கிய உறவின் பிரதிபலிப்பாக இன்று தொடங்கப்பட்டுள்ள கப்பல் சேவை அமைந்துள்ளது என்றார்.
இதையும் படிங்க: 'இந்தியா-மாலத்தீவு விமான சேவைகள் வரையறுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படும்'