தூத்துக்குடி : தமிழகம் முழுவதும் சென்னை ராதா எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தொடர்புடைய பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று (செப் 20) சோதனை மேற்கொண்டனர்.
தமிழக முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் தொடர்புடைய அனைத்து இடங்களிலும் கடந்த சில மாதங்களுக்கு முன் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அதில் அதிகாரிகள் பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றி செந்தில் பாலாஜியை சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய நபர்களுக்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் சென்னை ராதா எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில், தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்கு கன்வேயர் பெல்ட் மூலம் கரி கொண்டு வரும் பணியை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சாம்பல் கழிவுகளை கடலில் கரைக்கும் பணி மற்றும் சிமெண்ட் ஆலைகளுக்கு ஏற்றுமதி செய்யும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து நேற்று (செப். 20) வருமானவரித்துறை அதிகாரிகள் அனல் மின் நிலையத்தில் சுமார் 6 மணி நேரமாக ராதா இன்ஜினியரிங் நிறுவனத்தின் கணக்கு வழக்குகள் மற்றும் நிலக்கரி இறக்குமதி உள்ளிட்டவை குறித்து சோதனை செய்து முக்கிய ஆவணங்களை கைப்பற்றிச் சென்றனர்.
இதையும் படிங்க: வாடகை கார் ஓட்டுநர் வங்கியில் டெபாசிட்டான ரூ.9ஆயிரம் கோடி.. இன்ப அதிர்ச்சியில் மிரண்டு போன ஓட்டுநர்!
இந்நிலையில், இன்று (செப். 21) 2வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் சென்னை ராதா எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் இருந்து சப் காண்ட்ராக்ட் எடுத்து இருக்கும் தூத்துக்குடியை சேர்ந்த திரவியம் இன்ஜினியரிங் நிறுவனம் சார்பில் கன்வேயர் பெல்ட் அமைக்கும் பணி நடைபெற்றது.
இந்த பணிகளில் ஏற்பட்ட முறைகேடு குறித்தும் அதன் உரிமையாளர் ஜான் வசீகரன் என்பவரிடமும், சாம்பல் கையாளும் பணியை சப்கான்ட்ராக்டாக எடுத்துள்ள திவ்யா ட்ரேடர்ஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் ஆகியோரிடம் கணக்கு குறித்து விசாரணை செய்வதற்காக வருமானவரித்துறை இணை இயக்குனர் சாமுவேல் தலைமையில் 3 அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மின்சாரத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருக்கும்பொழுது சென்னை ராதா இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு பல்வேறு பணிகள் ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பல்வேறு பணிகள் நடைபெறாமல் பணம் எடுத்ததாக புகார் எழுந்துள்ள நிலையில் வருமானவரித்துறை அதிகாரிகளின் 2வது நாள் சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: "தோல்வி பயம் பாஜகவுக்கா?.. கனிமொழிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டதா...? வெற்று அறிக்கை மட்டும் வெளியிடுவதா.."- வானதி சீனிவாசன்!