தூத்துக்குடி: சில்லாநத்தம் பகுதியை சேர்ந்தவர் நல்லதம்பி. லாரி ஓட்டுநரான இவர் ஆன்லைன் ரம்மியில் பணம் வைத்து விளையாடுவதை வழக்கமாக வைத்து வந்துள்ளார். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பல லட்ச ரூபாயை இழந்த நல்லதம்பி, தனது தம்பி முத்துராஜிடம் 3 லட்சம் ரூபாய் கடனாக வாங்கி அந்த பணத்தையும் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்துள்ளார்.
இந்த நிலையில் முத்துராஜ் தனது சகோதரன் நல்லதம்பியிடம் தான் கொடுத்த பணத்தை திரும்பி கேட்டுள்ளார். ஆனால், நல்லதம்பி பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார். மேலும், சில்லாநத்தம் கிராமத்தில் உள்ள பூர்வீக வீட்டையும் விற்பனை செய்து தனக்கு பணம் தர வேண்டும் என நல்லதம்பி முத்துராஜிடம் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த முத்துராஜ் நேற்று (ஏப்.1) இரவு நல்லதம்பியை பண்டாரம்பட்டி அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று, தலையில் இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கி கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டதாக தெரிகிறது. பின்னர், இன்று காலை புதியம்புத்தூர் காவல் நிலையத்தில் முத்துராஜ் சரணடைந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, பண்டாரம்பட்டி காட்டுப்பகுதியில் கிடந்த நல்லதம்பியின் உடலை சிப்காட் காவல்துறையினர் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்த ஊரக துணை கண்காணிப்பாளர் சுரேஷ் நேரடியாக சென்று சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த 40-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டனர். அதேநேரம் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்காக தமிழ்நாடு அரசு பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை இரு முறை ஆளுநர் திருப்பி அனுப்பினார். இதையடுத்து மீண்டும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு கடந்த வாரம் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியால் மேலும் ஒருவர் தற்கொலை