ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால், மது கிடைக்காமல் மது பிரியர்கள் அவதியடைந்துள்ளனர். இவர்களுக்காகவே ஆங்காங்கே கள்ளச்சாராயம் காய்ச்சி அதிக விலைக்கு விற்றுவருகின்றனர். இவர்களை பிடிப்பது காவல் துறையினருக்கு சற்று சவாலாகவே உள்ளது.
அதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் அருகே வாழைத் தோட்டத்திற்குள் கள்ளசாராயம் காய்ச்சுவதற்கு ஊறல் போட்டு வைத்திருப்பதாக தூத்துக்குடி மதுவிலக்கு அமல் பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், மதுவிலக்கு துணை காவல் கண்காணிப்பளர் பீட்டர் ஃபெலிக்ஸ் தலைமையில் காவல் ஆய்வாளர் பழனிசாமி, உதவி ஆய்வாளர்கள் மீஹா, ராமகிருஷ்ணன் உள்ளிட்ட ஸ்ரீவைகுண்டம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அங்கு வெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த சேது என்பவருக்கு சொந்தமான வாழைத்தோட்டத்தில் சோதனை நடத்தியதில் சுமார் 150 லிட்டர் சாராய ஊறல்கள் இருப்பதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து சாராய ஊறலை காவல் துறையினர் அழித்தனர். இச்சம்பவத்தையடுத்து சேது தலைமறைவாகிவிட்டார். இது தொடர்பாக தூத்துக்குடி மதுவிலக்கு காவல் நிலைய காவல் துறையினர் சேது மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: கள்ளச்சாராயம் கடத்தல் 11 பேர் கைது - 650 லிட்டர் சாராயம் பறிமுதல்!