தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே அச்சங்குளம் கிராமத்தின் காட்டுப் பகுதியில் ஆண் சடலம் ஒன்று தீயில் எரிந்து கொண்டிருந்தது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் இதுகுறித்து காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன், மணியாச்சி டிஎஸ்பி லோகேஸ்வரன், பசுவந்தனை காவல் நிலைய ஆய்வாளர் சுதேசன் உள்ளிட்ட காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
தொடர்ந்து அங்கு பாதி எரிந்த நிலையில் கிடந்த சடலத்தை மீட்ட காவல் துறையினர் உடற்கூராய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக பசுவந்தனை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், தீ வைத்து எரிக்கப்பட்டவர் கோவில்பட்டி அருகே குருவிநத்தம் தெற்கு தெருவைச் சேர்ந்த சவரிமுத்து மகன் ஞானசேகர் (42) என்பதும், இவர் மீன் வியாபாரம் செய்து கொண்டிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து குருவிநத்தம் சென்று, ஞானசேகர் மனைவி சலைத்ராணி (38) மற்றும் அவர்களது 15, 14 வயது மகள்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். தொடர்ந்து நடதிய தீவிர விசாரணையில், அதே ஊரைச் சேர்ந்த சுடலையாண்டி மகன் கருப்பசாமி என்ற கார்பெண்டர் கார்த்திக் (24) என்பவர் ஞானசேகரின் மூத்த மகளை காதலித்துள்ளார்.
மேலும், கார்த்திக் உயிரிழந்த ஞானசேகரின் மனைவியுடனும் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த ஞானசேகர் மனைவியையும், மகளையும் கண்டித்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மனைவிக்கும், ஞானசேகருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த அவர், அவரது மகள்கள் மற்றும் கார்த்திக் ஆகியோர் சேர்ந்து, ஞானசேசரை கம்பி, அரிவாளால் தாக்கியும், கொலை செய்துள்ளனர். பின்னர் அவரது உடலை சாக்கில் மூட்டையாக கட்டி, காரில் ஏற்றி அச்சங்குளம் காட்டுப்பகுதியில் கொண்டு வந்த போட்டு பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பியோடியதாக அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கார்த்திக், ஞானசேகரின் மனைவி சலைத்ராணி, அவரது மகள் உள்ளிட்ட மூவரையும் கைது செய்தனர். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது. இக்கொலை விவகாரத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதாக என பசுவந்தனை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: விசாரணைக்கு வந்தால் அடிப்பது வழக்கம் தான்.. சாத்தான் குளம் வழக்கில் தலைமை காவலர் சாட்சியம்..