தூத்துக்குடி மாவட்டத்தில் வேதாந்தா நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் போராட்டங்களை நடத்திவந்தனர்.
இது தொடர்பாக கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த போராட்டம் பெரும் கலவரத்தில் முடிவடைந்தது. மே 22ஆம் தேதி நடந்த போராட்டத்தில் காவல்துறையால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.
இதனையடுத்து, தமிழ்நாடு முழுவதும் எதிர்ப்பலைகள் தீவிரமடைந்தன. இதனைத்தொடர்ந்து அந்த ஆலையை மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு, 2018 மே 28ஆம் தேதி அந்த ஆலை மூடி சீல்வைத்தது.
இதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை திறக்க ஆலை நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்திருந்த நிலையில் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
இந்தத் தீர்ப்பை ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு, பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்
இந்நிலையில் இன்று (ஆக.18) இது தொடர்பாக தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த ஆலையின் தலைமை செயல் அலுவலர் பங்கஜ் குமார் கூறுகையில், "ஸ்டெர்லைட் தொடர்பாக இன்று நீதிமன்றம் அளித்த தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதால் 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர், ஒரு லட்சம் பேர் மறைமுகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் தாமிர தேவையில் 40 விழுக்காடு உற்பத்தி செய்து வழங்கி வந்தோம். தற்போது தாமிர உற்பத்தியில் தன்னிறைவு பெற்று வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறோம். இரண்டு பில்லியன் டாலர் அளவிற்கு தாமிரம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்தியா முழுவதும் புதிய தொழிற்சாலைகளை தொடங்க ஊக்குவிக்கும் நேரத்தில் எங்களை போன்ற ஆலைகளை மூடுவதற்கும் அரசு காரணமாகிறது. சர்வதேசத் தரத்தில் தாமிர உருக்கு ஆலை இயங்கி வந்தது.
கழிவுகள் வெளியேற்ற அரசு கூறப்பட்ட தர நிர்ணயத்தில் 40 விழுக்காடு மட்டுமே வெளியேற்றப்படுகிறது. நீதித்துறையின் மேல் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.
தீர்ப்பின் முழு விவரங்களையும் படித்த பிறகு அடுத்த கட்ட நகர்வு குறித்து முடிவெடுப்போம். சட்ட ரீதியாக வழக்கை தொடருவோம். ஆலை மூடப்பட்டதில் அரசியல் பின்புலம் இருக்கிறதா என்பது குறித்து தற்போது கூற முடியாது " என்று தெரிவித்தார்.
இதன்போது ஆலையின் வர்த்தகப் பிரிவு துணைத் தலைவர் தனவேல் உடனிருந்தார்.