தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் பகுதிகளில் நடப்பாண்டு 'ராஃபி' பருவத்தில் பயிரிடுவதற்கு விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர். இதனை ஒட்டி அப்பகுதிகளில் முதல் விதைப்பாக ஆடிப்பெருக்கை முன்னிட்டு முதல்கட்டமாக நிலக்கடலை விதைப்பு செய்தனர்.
அடுத்த பருவமான புரட்டாசி முதல் வாரத்தில் மக்காச்சோளம், உளுந்து, பாசி, வெள்ளைச்சோளம், கம்பு, மிளகாய், வெங்காயம், பருத்தி பெருமளவில் பயிரிடப்படுகிறது. தனியார் விதை நிறுவனங்கள் போட்டிபோட்டுக்கொண்டு விவசாயிகளைக்கவரும் வகையில் கிராமம், கிராமமாக தங்கள் நிறுவன விதைகளை விளம்பரம் செய்து வருகின்றன. 'ஆடிப்பட்டம் தேடிவிதை' என்ற பழமொழிக்கு ஏற்ப விவசாயிகள் விதைப்புப் பணியைத் தொடங்கி உள்ளனர்.
புரட்டாசி முதல் வாரத்தில் சிறுதானியங்கள் விதைப்பு செய்வது வழக்கம். இந்நிலையில் அரசு வேளாண்மைத்துறை பல்வேறு விதைகளை விவசாயிகளுக்கு வழங்குவதாக கூறிவந்தாலும் நிர்வாகக்கோளாறு காரணமாக பருவத்திற்கு ஏற்ப வழங்குவதில்லை. மாறாக விதைப்பு முடிந்த பின்னரே ஒருசில விதைகள் மற்றும் கருவிகள் வேளாண் விரிவாக்க மையங்களில் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்க விற்பனைக்கு வருகின்றன.
காலம் கடந்து வழங்கப்படும் விதைகள், உரங்கள், ரசாயன மருந்துகள், இயற்கை மருந்துகள் சொட்டு நீர்ப்பாசன தெளிப்பான்கள், பயனின்றி போய்விடுகின்றன. அதன் தரமும் கேள்விக்குறியாக உள்ளது. தவிர விவசாயிகள் விரும்பும் விதைகள், மருந்துகள், உரங்களும் கிடைப்பதில்லை.
அதனால் தனியார் விதைக்கடைகளையே நாடவேண்டி உள்ளது. எனவே, புரட்டாசி பட்டத்திற்கு முன்பு விதைகள், சிறு தானிய வகைகள் மற்றும் உரங்கள் முன்கூட்டியே வழங்கினால் மட்டும் பயனுள்ளதாக இருக்கும் என கரிசல் பூமி விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:மருத்துவம் சார்ந்த படிப்புகளில் வேலைவாய்ப்பு எப்படி? விளக்குகிறார் மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கைக்குழு செயலாளர்