தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கான வேட்பாளர்களின் வேட்புமனு பரிசீலனை இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தமிழ் பேரரசு கட்சித் தலைவர் கவுதமன், சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
வேட்புமனு பரிசீலனை செய்யும்போது திமுக வேட்பாளர் கனிமொழி, பாஜக வேட்பாளர் தமிழிசை ஆகியோரின் வேட்புமனுக்களை ஏற்பதில் சிக்கல் எழுந்தது. ஆனால் சிறிது நேரத்திற்குப் பிறகு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி இருவரின் வேட்பு மனுக்களையும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார். இதற்கு தமிழ் பேரரசு கட்சித் தலைவர் இயக்குநர் கவுதமன் எதிர்ப்பு தெரிவித்தார்.
அதனையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் ஒரு இயக்குநராக பாஜக வேட்பாளர் தமிழிசைஉள்ளார். அதை வேட்புமனுவில் அவர் குறிப்பிடவில்லை என திமுகவினர் சுட்டிக்காட்டினர். இந்த காரணத்துக்காக அவருடைய வேட்புமனுவை தேர்தல் அலுவலர் நிராகரிக்கலாம். ஆனால் அவர் நிராகரிக்கவில்லை.
இதைப்போல் நிரந்தர கணக்கு எண் (பான் கார்டு) எண்ணைவேட்புமனுவில் திமுக வேட்பாளர் கனிமொழி குறிப்பிடவில்லை என பாஜக தரப்பில் குற்றம்சாட்டினர். ஆனால் இரு வேட்பாளர்களின் மனுவும் சிறிது நேரத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி அறிவித்தார். இது ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. இது அப்பட்டமான தேர்தல் விதிமீறல்” என காட்டமாக பேசினார்.