தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் விசாரணை கைதியாக அழைத்துச் செல்லப்பட்ட தந்தையும் மகனும் உயிரிழந்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. இதனையடுத்து வியாபாரிகள் சங்கம் சார்பாக இன்று சாத்தான்குளம், பேய்க்குளம் பகுதியில் கடையடைப்பு அறிவிக்கப்பட்டது.
சிறையிலிருந்த தந்தை, மகன் உயிரிழந்ததற்கு நீதி கேட்டு அவரது உறவினர்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சாத்தான்குளம் காமராஜர் சிலை முன்பு திருச்செந்தூர்-நாகர்கோவில் சாலையில் ஒரு மணி நேரமாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, பாதிக்கப்பட்டவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சாத்தான்குளம் காவல் நிலைய காவலர்கள் அனைவரையும் உடனடியாக பணியிடமாற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளர்கள் இரண்டுபேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். தந்தை, மகன் மரணம் குறித்து நீதிபதி தலைமையிலான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் தந்தை, மகன் உயிரிழப்பு: உடற்கூறாய்வு செய்யப்படாமல் இருக்கும் உடல்கள்!