தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணிபுரிந்து வந்தவர் குருசாமி (50). இவர் அங்கு பணி புரியும் இளம் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளிக்கும் வீடியோ சமீபத்தில் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானது.
இது தொடர்பாக கோவில்பட்டி சுகாதார பணிகள் துணை இயக்குநர் போஸ்கோ ராஜா விசாரணை நடத்த உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் அதே மருத்துவமனையில் வேலை பார்க்கும் பெண் ஒருவர் மருத்துவரின் அத்துமீறலை பொறுத்துக்கொள்ள முடியாமல் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், அரசு மருத்துவர் குருசாமி பணியில் இருக்கும்போதே தனக்கு பாலியல் தொல்லை அளிக்கிறார். மேலும் தன்னுடன் பணிபுரியும் சில பெண்களிடம் மருத்துவமனையில் வைத்தே தகாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.
மருத்துவர் குருசாமியின் இந்த அத்துமீறலை வீடியோவாக பதிவு செய்த காரணத்துக்காக தன்னுடைய மொபைல் போனை கைப்பற்றி என்னை தகாத வார்த்தைகளில் திட்டி மிரட்டல் விடுத்தார் எனப் புகாரில் அப்பெண் குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் புகாரையடுத்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மருத்துவர் குருசாமியிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணை குறித்து காவல்துறையினர் கூறுகையில், “மருத்துவர் குருசாமி சக பெண் பணியாளர்களின் செல்போன் எண்களை வாங்கி வைத்து கொண்டு அவர்களுக்கு தனியாக மெசேஜ் அனுப்புவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
குறிப்பிட்ட சில பெண்களின் செல்போன் எண்ணுக்கு அவர்களது உடை, உடல் அமைப்பு குறித்து தகவல்களை முதலில் அனுப்புவார். இதற்கு அந்த பெண்கள் அனுப்பும் பதிலை வைத்து அடுத்தக்கட்ட மெசேஜ்களை அனுப்புவார்.
குருசாமி மெசேஜ்களுக்கு பெண்கள் ஆட்சேபனை தெரிவித்தால், “சாரி, ராங் போஸ்ட். தவறாக அனுப்பி விட்டேன்”என்று மெசேஜ் அனுப்புவார். இதுபோன்று தினமும் பல பெண்களுக்கு குருசாமி மெசேஜ் அனுப்பி வந்துள்ளார். இப்போது வீடியோவும் வெளியாகி குருசாமி மீது புகாரும் கொடுக்கப்பட்டதால் அவர் அகப்பட்டுக்கொண்டார். தற்போது குருசாமி மீது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்” என்றனர்.
இதையும் படிங்க: பெண் பாலியல் புகார்: பயிற்சி ஐஏஎஸ் அலுவலர் மீது வழக்குப்பதிவு!