தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயிலில், தசரா திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவிற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், நேற்று (அக்.25) மாலையுடன் தசரா திருவிழா நிறைவு பெற்ற நிலையில், ஏராளமான பக்தர்கள் சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, போதிய பேருந்துகள் வசதிகள் இல்லாததால், பொதுமக்கள் கூட்ட நெரிசலில் இயக்கப்பட்ட பேருந்துகளில் படியில் தொங்கியவாறு பயணம் செய்துள்ளனர். அப்பொழுது, திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையத்தில், திருநெல்வேலி மாவட்டம், தேவர்குளத்தைச் சேர்ந்த கலா (38) என்பவர், திருநெல்வேலி செல்வதற்காக தனியார் பேருந்தில் ஏற முயன்றபோது, கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி கழுத்தில் அணிந்திருந்த மூன்றரை சவரன் தங்கச் சங்கிலியை பெண் ஒருவர் பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: நீட் தேர்வை எதிர்க்கும் திமுக அரசு ஒரே பணிக்கு இருத் தேர்வுகளை நடத்துவதா? - ஆசிரியர்கள் தேர்வு விவகாரத்தில் அன்புமணி ஆவேசம்
இதனையடுத்து, பேருந்துக்குள் சென்ற கலா கழுத்தை பார்த்தபோது அணிந்திருந்த செயினைக் காணவில்லை. இதனால் பதட்டமடைந்த கலா பேருந்தை விட்டு, கீழே இறங்கி கதறி அழுதுள்ளார். ஆனால், ஓட்டுநர் பேருந்தை இயக்கிச் சென்றுள்ளார். இதனால் கலா அழுது கொண்டே பேருந்தின் பின்னால் ஓடியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, செயின் பறிக்கப்பட்ட சம்பவம் குறிந்து, புகார் அளிப்பதற்கு திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளார். அங்கு காவல் நிலைய வாசலில் அமர்ந்து கதறி அழும் காட்சி காண்போரை கண் கலங்கச் செய்துள்ளது. மேலும், திருச்செந்தூரில் உள்ள நகைக்கடையில் வேலை பார்க்கும் கண்ணன் என்பவர் செல்போனை, பேருந்தில் ஏற முயன்றபோது பறித்துச் சென்றுள்ளனர். இதுபோல், பேருந்தில் ஏறிய சுமார் 10 பேர் செல்போனை கூட்ட நெரிசலை சாதகமாகப் பயன்படுத்தி, பறிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பெட்ரோல் குண்டு வீசப்பட்டதை தீவிரவாத செயலாக பார்ப்பதாக ஆளுநர் மாளிகை அதிகாரிகள் தகவல்!