தூத்துக்குடி: தமிழ்நாட்டில் புகழ்பெற்ற ஆட்டுச்சந்தைகளில் மிகவும் முக்கியமான சந்தை தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி அருகேயுள்ள எட்டயபுரம் ஆட்டுச்சந்தையாகும். இங்கு வாரம் தோறும் சனிக்கிழமை நடைபெறும் இந்த ஆட்டுச்சந்தைக்கு மதுரை, சென்னை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடுகளை வாங்க வியாபாரிகள் வாங்க வருவது வழக்கமாக உள்ளது.
வழக்கமாக வாரம் தோறும் ரூ.2 கோடி வரையிலும் விற்பனையாகும், ஆனால் பண்டிகை காலங்களில் ரூ.4 கோடி வரையிலும் ஆடுகள் விற்பனை செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில், நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் எட்டயபுரத்தில் இன்று(அக்.22) நடைபெற்ற ஆட்டுச்சந்தை களை கட்டியது. நாளை மறுநாள் தீபாவளி என்பதால் விற்பனைக்கு அதிகளவில் ஆடுகள் கொண்டு வரப்பட்டு இருந்தது.
12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ஆடுகள் வரை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருந்தன. விலையும் கடந்த வாரங்களை விட சற்று குறைவாக இருந்த காரணத்தினால் வியாபாரிகள் ஆர்வமுடன் ஆடுகளை வாங்கி சென்றனர். 7 ஆயிரம் முதல் 13 ஆயிரம் வரை ஆடுகள் எடைக்கு ஏற்ப விற்பனை செய்யப்பட்டன. இறைச்சியின் சுவைக்காக இளம் ஆடுகளுக்கு வியாபாரிகளிடம் டிமாண்ட் அதிகமாக இருந்தது.
இதையும் படிங்க:இஸ்ரோவின் வரலாற்று சிறப்புமிக்க ஜிஎஸ்எல்வி மாக்-3 இன்று நள்ளிரவில் விண்ணில் பாய்கிறது