தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சியில் தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு திட்ட நிதி 2019-20ன் கீழ் ஆறு பிரிவுகளாக ரூ. 10 கோடி மதிப்பில் 14.34 கி.மீ. தூரத்துக்கு சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. கோவில்பட்டி கதிரேசன் கோயில் சாலையில் நடைபெறும் பணிகளை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து கோவில்பட்டி பகுதியில் உள்ள தீப்பெட்டி ஆலைகளுக்கு வந்து செல்லும் லாரிகள் நிறுத்தப்படும் எஸ்.எஸ்.டி.எம். கல்லூரிக்குச் சென்று, லாரிகளுக்கு கிருமிநாசினி தெளிக்கப்படும் பணிகளை பார்வையிட்டார். பின்னர் அம்மா உணவகத்தில் அதிமுக சார்பில் வழங்கப்பட்டு வரும் இலவச உணவு வழங்கும் பணிகளை அமைச்சர் பார்வையிட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, “வெட்டுக்கிளிகள் படையெடுப்பு குறித்து இன்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதலமைச்சர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதில் சேலம், நாமக்கல், ஈரோடு, கன்னியாகுமரி போன்ற நான்கு மாவட்டங்களுக்கு தற்காப்பு நடவடிக்கைகளை 54 லட்சம் ரூபாய் பணத்தை முதல் கட்டமாக ஒதுக்கி உள்ளார்.
இலவச மின்சார சட்டத் திருத்தம் தொடர்பாக தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் மாநில உரிமைகளைப் பாதிக்கும் விவசாயத்திற்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்படக்கூடாது என்று முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்” என்றார்.