தூத்துக்குடி: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் உள்ள தனியார் முந்திரி ஆலையில் இருந்து ரூ.1.10 கோடி மதிப்புள்ள 12 டன் எடை கொண்ட முந்திரியுடன், தூத்துக்குடி துறைமுகத்திற்கு லாரி சென்றது. இந்த லாரியை ஆலங்குளத்தைச் சேர்ந்த ஹரி என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே அடையாளம் தெரியாத நபர்கள் கத்தியை காட்டி ஓட்டுநரை மிரட்டி லாரியை கடத்தினர். இது தொடர்பாக ஓட்டுநர் ஹரி, முந்திரி ஆலை மேலாளர் ஹரிகரனுக்கு தகவல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அவர், புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
லாரி கடத்தல்
இதையடுத்து ஊரக உதவி காவல் கண்காணிப்பாளர் சந்தீஸ் தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அனைத்துச் சோதனை சாவடிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு வாகன தணிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அந்த கடத்தல் லாரியை மடக்கி பிடித்தனர். மேலும், பின்னால் காரில் வந்த 7 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
7 பேர் கைது
விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி அன்னை தெரசா நகரைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் மகன் ஜெயசிங் (45), எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த மாரிமுத்து (30), முறப்பநாடு கணபதி கோயில் தெருவைச் சேர்ந்த செந்தில் முருகன் (33), முள்ளக்காடு பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த மனோகரன் (35), பிரையண்ட் நகர் 12ஆவது தெருவைச் சேர்ந்த விஷ்ணு (25), முறப்பநாட்டைச் சேர்ந்த பாண்டி (20), நெல்லை சமாதான புரத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (26) ஆகியோர் என்பது தெரியவந்தது. பின்னர் 7 பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
கார் பறிமுதல்
முந்திரி லாரி கடத்தல் சம்பவத்தில் முன்னாள் அமைச்சரின் மகன் கைது செய்யப்பட்டிருப்பது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கைது செய்யப்பட்ட 7 பேரையும் காவல் துறையினர் மேல் விசாரணைக்காக தூத்துக்குடி அழைத்து வந்தனர். மேலும் கடத்தப்பட்ட லாரி, கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றையும் காவல் துறையினர் தூத்துக்குடிக்கு கொண்டு வந்தனர்.
தூத்துக்குடியில் ரூ.1.15 கோடி மதிப்புள்ள முந்திரி, லாரியுடன் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அமேசான் மூலம் ஆன்லைனில் கஞ்சா விற்பனை - CAIT கடும் கண்டனம்