தூத்துக்குடி: கோவில்பட்டியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் தலைமையில் திமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் அக்கட்சிகளிலிருந்து விலகி முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு முன்னிலையில் இன்று (நவ.27) அதிமுகவில் இணைந்தனர்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடையே பேசிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு, "திமுகவில் வாரிசு அரசியல் என்பது காலம் காலமாக உள்ள அரசியல்தான். அதிமுகவில் வாரிசு அரசியல் என்ற பேச்சுக்கே இடமில்லை. உழைக்கின்ற தொண்டர்கள் தலைமை பொறுப்பிற்கு வரமுடியும் என்று நிரூபிக்கப்பட்ட ஒன்று. எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்து 51வது பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைத்து சிறப்பாக செல்கிறது. புரட்சி தலைவர் எம்ஜிஆர் மறைவுக்குப் பின், ஜனநாயக முறைப்படி ஜெயலலிதாவை தேர்ந்தெடுத்தனர்.
இரண்டு அணிகளாக பிளவுபட்டாலும் காலத்தின் கட்டாயத்தில் அம்மாவின் தலைமையை ஏற்றுக்கொண்டனர். அதிமுக, திமுக என்பது அடிப்படையிலேயே வேறுவேறு. வாரிசு அரசியல் என்பதே அதிமுகவில் கிடையாது. வாரிசு அரசியலை எதிர்த்து உருவாக்கப்பட்ட கட்சிதான் அதிமுக.
இரட்டை நிலைப்பாடில் திமுக: திமுகவில் உதயநிதிக்கு அடுத்து வாரிசு வந்தால் கூட, அவர்தான் தலைமை தாங்க முடியும்; தவிர திமுகவில் இன்றைய முன்னணி தலைவர்கள் எல்லோரும் ஏற்றுக் கொள்ளவேண்டும். அது திமுகவினருக்கு காலத்தின் கட்டாயம். பாஜகவினரோடு பயணித்தவர்கள்தான் திமுகவினர். இன்று என்னவோ தீண்டத்தாக கட்சி போல் பாஜக பேசி வருகின்றனர்.பாஜகவோடு கொள்கையில் நாங்கள் எப்பொழுதும் சமரசம் செய்து கொள்வதில்லை. இரு மொழிக்கொள்கைகள் விவகாரத்தில் எந்த மாறுபாடும் இல்லை.
கருத்து வேறுபாடே காரணம்: பாஜக உடனான கூட்டணி என்பது வேறு; கொள்கை வேறு. புரட்சித்தலைவர் தந்த சின்னம் வெற்றி சின்னமாக 'இரட்டை இலை' சின்னம் எங்களிடம் தான் உள்ளது. அதையே நாங்கள் விட வேண்டும். பொறாமையில் தினகரன் பேசுகிறார். அதிமுக கட்சி சிதறவில்லை கட்டுகோப்பாக உள்ளது. கழக அமைப்பு தேர்தல் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தான் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி தேர்வு செய்துள்ளனர். கட்சியில் எப்பொழுதும் பிளவு இல்லை கருத்து வேறுபாடு காரணமாக ஓபிஎஸ்-யை எடப்பாடி நீக்கி வைத்துள்ளார்.
விரைவில் இறுதி முடிவு உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் நல்ல முடிவு வரும் எனக்கூறிய அவர், ஓபிஎஸ் கட்சியை விட்டு வெளியேற்றிய பின்பு அதிமுகவில் பல்வேறு போராட்டங்கள் பொன்விழா கூட்டங்களை வெற்றிகரமாக நடத்தினோம். எனவே, கட்சியில் பிளவு இல்லை. ஓபிஎஸ் நியமிக்கும் பொறுப்புகள் எல்லாம் செல்லாத ஒன்று. திமுக ஆட்சியில் எந்தத் துறையிலும் ஆக்கமான பணிகள் நடைபெறவில்லை.
அமைச்சர்களைக் கண்டு அச்சம்: அம்மாவின் ஆட்சி காலத்தில் கொண்டு வந்த திட்டங்களை முடக்கப்பட்டால் நாங்கள் போராடுவோம். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்களை கண்டு பயப்படுகிறார். பொதுக்குழுவில் அவரே பேசியது, எல்லோருக்கும் தெரியும். உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் அடாவடி தனமாக வசூலில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு எந்தவித வளர்ச்சிப் பணியும் நடைபெறவில்லை. வியாபாரத்தில் முதலீடு செய்து எடுப்பதுபோல் செய்கின்றனர்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: கனிமொழி எம்பி வீட்டில் புகுந்த மர்ம நபர்.. தூத்துக்குடியில் நடந்தது என்ன?