தூத்துக்குடி: பெருந்தலைவர் மக்கள் கட்சி நிர்வாகிகள் சந்திப்பு, புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகப் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர்.தனபாலன் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்திற்கு வருகை தந்தார்.
பின்னர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியது, “தமிழ்நாடு முழுவதும் மிகப் பெரிய அமைப்பைக் கொண்டது பெருந்தலைவர் மக்கள் கட்சி. 2019ஆம் ஆண்டு முதல் அதிமுகவுடன் தொடர்ந்து கூட்டணி அமைத்து வருகிறது.
அதிமுக கூட்டணியோடு 2021இல் சட்டமன்ற தேர்தலைச் சந்தித்தோம். 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் அதிமுக கூட்டணி தொடரும். மேலும் சிறந்த ஐபிஎஸ் அதிகாரி, டிஜிபியாக இருந்து, எந்த வித அப்பழுக்கற்றும் இல்லாமல் அந்த பதவியை அலங்கரித்தவர் சைலேந்திரபாபு. அவருக்காக டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவியை நிறுத்தி வைப்பது நியாயமற்றது. ஆளுநர் மீண்டும் அதனை பரிசீலனை செய்து ஒப்புதல் அளிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் பனை தொழிலாளர்கள் பதநீர் இறக்கினாலும் கல்விற்றார்கள் என்று வழக்கு பதிவு செய்து ஜாமீனில் வெளி வர முடியாத சூழ்நிலை தான் உள்ளது. முதலமைச்சர் பனைமரத்தை வெட்டுபவர்கள் மீது வழக்கு தொடரப்படும் என்று சொன்னார். ஆனால் பனைமரத்தை வெட்டுபவர்கள் மீது எந்த வழக்கும் இதுவரை பதிவு செய்யவில்லை.
அதோடு மட்டுமல்ல பனை அழிந்த காரணத்தினால் வெள்ளப்பெருக்கு, சுனாமி போன்ற பேரழிவு ஏற்படுகிறது ஆகையால் வழக்கு தொடரப்படும் என்று சொல்வதோடு மட்டுமல்லாமல் அதனை செயல்படுத்த வேண்டும். அதே போல் கல் என்பது போதைப்பொருள் அல்ல, உணவு பொருள்.
அதனால் அதை போதைப்பொருள் பட்டியலிலிருந்து நீக்கிவிட்டு உணவு பொருள் பட்டியலில் சேர்க்க வேண்டும். மேலும், கள் குடித்து யாராவது இறந்தால் ஒரு கோடி ரூபாய் பரிசு தரப்படும் என்று கூறியிருந்தோம். பின்னர், 10 கோடி ரூபாய் என்று கூறினோம். இதுவரை யாரும் இறக்கவில்லை. திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
கிட்டத்தட்டத் தமிழ்நாடு முழுவதும் நான்கு கோடி பனை மரங்கள் உள்ளது. அதனை நம்பி 10 லட்சம் தொழிலாளர்கள் இருக்கின்றார்கள். பனைப் பொருளும், கல்லும் விற்பனைக்கு வரும் போது விவசாயிகள் வாழ்வாதாரம் மேம்படும் என்ற காரணத்தினால் தமிழ்நாடு அரசு உணவுப் பொருள் பட்டியலில் சேர்க்க வேண்டும்" என கூறினார்.
இதையும் படிங்க: தூத்துக்குடி மாநகராட்சியின் கல்விச் சேவைக்கு தேசிய அளவில் 3வது பரிசு.. மாநகராட்சி மேயர் தகவல்!