தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அடுத்த மாணிக்கவாசகபுரம் பகுதியைச் சேர்ந்தவர், எட்வர்ட் ராஜதுரை (47). இவர் பாஜக முன்னாள் சிறுபான்மை அணி நிர்வாகியாக இருந்தார். இந்நிலையில், அவர் அட்மினாக இருக்கும் வாட்ஸ் அப் குழு ஒன்றில், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறாக திட்டி பேசும் ஆடியோ வெளியிட்டதாக கூறப்படுகிறது.
இந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சாத்தான்குளம் திமுக நகரத் துணைச் செயலாளர் வெள்ள பாண்டியன் (73) என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், சாத்தான்குளம் போலீசார் 294 (B), 153, 504, 505 உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, பாஜக பிரமுகர் எட்வர்ட் ராஜதுரையை கைது செய்தனர்.
பின்னர் கைது செய்யப்பட்ட பாஜக பிரமுகர் எட்வர்ட் ராஜதுரையிடம், சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் முத்து தலைமையில், உதவி ஆய்வாளர் டேவிட் உட்பட குற்றப்பிரிவு காவல் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை ஒருமையில் திட்டி ஆடியோ வெளியிட்ட முன்னாள் பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இறந்தும் உயிர் வாழும் ஆசிரியர்.. மூளைச்சாவு அடைந்ததால் உடல் உறுப்புகள் தானம்!