தூத்துக்குடி: தமிழ்நாட்டில் புதிதாக உருவாகியுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகத் தென் மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழையானது பெய்தது. குறிப்பாக திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இடைவிடாது நேற்று முன்தினம் முதல் அதிக கனமழை பெய்து வந்தது. இதனால் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வெள்ளமாகக் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது.
தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி, கயத்தாறு, விளாத்திகுளம், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதலே பரவலாக மழை பெய்து வருகிறது.
நேற்று முன்தினம் பகல், பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கிய நிலையில், விடிய, விடிய பெய்த மழையால் நேற்று நகரத்தின் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கியது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். மேலும், அப்பகுதியில் உள்ள இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்கள் மழை நீரில் மூழ்கின. இதனால், தென் மாவட்டங்களுக்குச் செல்லும் போக்குவரத்துச் சேவைகள் பாதிக்கப்பட்டது.
நகரின் பல்வேறு பகுதிகளில் மழை நீரானது காட்டாற்று வெள்ளம் போல ஓடிக் கொண்டிருந்தது. இதனால், மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான முறையில் அருகில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து வகை கல்வி நிலையங்களுக்கும் நேற்று (டிச.18) விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மழையால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைத்துள்ள மக்களுக்கு அருப்புக்கோட்டை மற்றும் விருதுநகர் பகுதிகளில் இருந்து உணவு கொண்டுவரப்பட்டு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், தூத்துக்குடி நகரம் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்து காணப்பட்டதால் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர். தொடர்ந்து பெய்த கனமழையால் வாகனங்களை செலுத்த இயலாத சூழல் உருவாகியுள்ளது.
இதையும் படிங்க: நிரம்பிய வைகை அணை; கரையோர மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை!