"உப்பில்லாப் பண்டம் குப்பையிலே" என்பது வெறும் பழமொழி அல்ல, அது ஓர் வாழ்வியல் உண்மையும்கூட. அத்தியாவசியப் பொருளான இந்த உப்பை சார்ந்து மட்டும் இந்தியாவில், சுமார் 16,000 தொழில்கள் உள்ளன. இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக வயல் பரப்பு போன்று பாத்திகளில் மேற்கொள்ளப்படும் அமைப்பு சாரா தொழில்களில், உப்பு விளைவித்தல் தொழிலை கவனத்தில் கொண்டே காந்தியடிகள் தனது உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தையே வடிவமைத்தார் என்றால் பாருங்களேன்.
இந்திய அளவில் உப்பு உற்பத்தியில் முதன்மை இடம் வகிக்கிறது தமிழ்நாடு. உப்பளங்களுக்குப் பெயர்பெற்ற தூத்துக்குடி மாவட்டத்தின் வேம்பார் முதல் பெரியதாழை வரையிலான கடற்கரை கிராமங்களில் மீன்பிடித்தல் தொழில் போல உப்பு உற்பத்தியும் முக்கியத் தொழிலாக மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
ஏறத்தாழ 25 ஆயிரம் ஏக்கருக்கும் மேலான பரப்பளவு கொண்ட உப்பளங்களில், உப்பு உற்பத்தி தொழிலில் நேரடியாக 30 ஆயிரம் பேரும், மறைமுகமாக 25 ஆயிரம் பேரும், வாகனப் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு வகையில், சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த உப்பு விளைவித்தல் தொழிலை நம்பி வாழ்ந்துவருகின்றனர்.
கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலால், இந்த உப்பு விளைவித்தல் தொழிலை முற்றிலுமாக முடங்கியுள்ளது. ஊரடங்கு உத்தரவால், தமிழ்நாட்டில் உணவுப் பொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்படக்கூடாது என்பதற்காக, அரசு அத்தியாவசியத் தேவைகளான காய்கறி, பால், மருந்தகம் உள்ளிட்ட கடைகளுக்கும், பொருளுக்கும் மளிகைக்கடைகள், பெட்ரோல் நிலையங்களுக்கும் கால நேரம் நிர்ணயித்து பொருள்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கியது போன்று, அத்தியாவசிய தேவைகளுள் ஒன்றான உப்பு விளைவித்தல் தொழிலுக்கும் தடை உத்தரவில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என, உப்பள தொழிலாளர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.
ஏப்ரல் தொடங்கி ஜூலை வரையிலுமான வெயில் அதிகம் உள்ள காலகட்டங்களில் மட்டுமே உப்பு விளைவிக்கும் காலமாகும். உப்பு விளையும் காலமான, தற்பொழுது கரோனா வைரஸ் பரவலை முன்னிறுத்தி, உப்பள தொழிலுக்கு தடை விதித்திருப்பது உப்பள தொழிலாளர்களின் ஆண்டு வருமானத்தை மொத்தமாக முடக்கியுள்ளது.
எனவே, விவசாயத்திற்குத் தமிழக அரசு விலக்கு அளித்து உத்தரவிட்டதைப்போல அத்தியாவசிய தேவைகளுள் ஒன்றான உப்பு உற்பத்திக்கும் அரசு விலக்கு அளிக்க வேண்டும் என, உப்பளத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உப்பளத்தில் உப்பு விளைவித்தல், உப்பு இறைத்தல், வாருதல், உப்பை பாக்கெட்டுகளில் அடைத்தல் என, ஒவ்வொரு நிலைகளுக்கும் சீரிய இடைவெளி விட்டே தொழிலாளர்கள் வேலை செய்வதால், சுய பாதுகாப்பு உறுதிசெய்யப்படுவதுடன், அத்தியாவசியத் தேவையான உப்பையும் விளைவித்து சந்தைப்படுத்த முடியும் என்கின்றனர் தூத்துக்குடி மாவட்ட உப்பள தொழிலாளர்கள்.
ஊரடங்கை நீட்டிக்கவா? வேண்டாமா? என அரசு ஆலோசிக்கும் இதேவேளையில், உப்பள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே உப்பளத்தை நம்பியிருக்கும் தொழிலாளர்களின் கோரிக்கை. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தத் தமிழ்நாடு அரசு வகுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஒன்று சமூக இடைவெளியைப் பின்பற்றுவது. இயல்பாகவேச் சமூக இடைவெளி விட்டு செய்யப்படும் ஒரு தொழில் உப்பு விளைவித்தல் ஆகும்.
எனவே, இத்தொழிலை மேற்கொள்ள தடையில் இருந்து விலக்களிக்குமா என்பதை எதிர்பார்த்து தொழிலாளர்கள் காத்திருக்கின்றனர்.