தூத்துக்குடி: விசைப்படகு உரிமையாளர்கள் வட்டப்பணம் 6 சதவீதம் மட்டுமே பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி விசைப்படகு மீனவர்கள் நேற்றுடன் (11.02.2023) 6ஆவது நாளாக கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இது சம்பந்தமாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தலைமையில், சார் ஆட்சியர் கெளரவ் குமார், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ், தாசில்தார் செல்வகுமார், மீன்வளத்துறை அதிகாரிகள் முன்னிலையில் விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் விசைப்படகு மீன்பிடி தொழிலாளர் சங்கத்தினர் சமாதான கூட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில் விசைப்படகு தொழிலாளர்களின் கோரிக்கைகள், உரிமையாளர்களின் கோரிக்கைகள் கூட்டத்தில் பேசப்பட்டது. அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கூறுகையில், "தூத்துக்குடி துறைமுகத்தில் 250 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடித்து வருகின்றனர். அதில் உரிமையாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே 6%, 10% வருவாய் பிடித்து கொடுப்பது சம்பந்தமாக சில பிரச்னைகள் ஏற்பட்டது.
இதில் 2 சங்கத்தையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில், சுமூகமான தீர்வு ஏற்பட்டது. 3 தொழிலாளர் சங்கமும், 6 உரிமையாளர் சங்கம் இணைத்து சங்கத்தின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கி வருவாய்த்துறை, காவல்துறை அலுவலர்களையும் உள்ளடக்கி இந்த குழுக்கள் மூலமாக பேச்சுவார்த்தை நடத்தி அடுத்த ஒரு மாத காலத்திற்குள் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும். அதனால் வரும் திங்கள்கிழமை முதல் தூத்துக்குடி துறைமுகத்தில் சீராக மீன்பிடி நடைபெறும் இதற்கு இடையில் குழுக்கள் ஆராய்ந்து பரிந்துரைக்கப்படும்" என்று கூறினார்.