தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே உள்ள அமலி நகர் மீனவர் கிராமத்தில் 'தூண்டில் பாலம்' அமைக்கக் கோரி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என மீனவர்கள் இன்று (பிப்.20) அறிவித்துள்ளனர்.
அமலி நகர் மீனவ கிராமத்தில் சுமார் 192 பைபர் படகுகள் உள்ளன. இந்த படகுகள் மூலம் இந்த பகுதி மக்கள் தினமும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று வருவது வழக்கம். அவ்வாறு மீன் பிடிக்கச் செல்லும்போதும், மீன்பிடித்துத் திரும்பும்போதும் தூண்டில் பாலம் இல்லாததால் படகுகள் சேதம் அடைந்தும் உயிர்ச் சேதம் ஏற்படுவதாகவும் மீனவர்கள் வேதனையுடன் தெரிவித்து வந்தனர். மேலும், அமலி நகரில் உடனடியாக தூண்டில் பாலம் அமைக்கக் கோரி, அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக அரசுக்குக் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில், அமலி நகர் மீனவ மக்கள் கோரிக்கை குறித்து கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் 2022-23 ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அமலிபுரத்திற்கு தூண்டில் பாலம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதற்காக ரூ.84 கோடி செலவு திட்டமும் தயாரிக்கப்பட்ட நிலையில், அதற்கான அரசாணை வெளியிடப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தேசிய பசுமை தீர்ப்பாயம் (National Green Tribunal Act) கடல் பகுதிகளில் கடலிலும் எவ்விதமான கற்களைக் கொட்டக்கூடாது என்றும் இதனால், கடலுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் தூண்டில் பாலம் அமைக்கக்கூடாது என்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்தது.
இதனால், அமலி நகரில் தூண்டில் பாலம் அமைப்பதற்கான பணிகள் தடைப்பட்டன. இந்த நிலையில், இந்த திட்டம் மூலம் தங்களுக்கு உடனடியாக தூண்டில் பாலம் அமைக்க வேண்டும் என்று கூறி இன்று முதல் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், தங்கள் படகுகளில் கருப்பு கொடியைக் கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மாணவிகள் உடற்கூராய்வு அறிக்கை எங்கே? - கொந்தளித்த பெற்றோரின் காலில் விழுந்த ஆசிரியை!